உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு 43 ஆடுகள் திருட்டு போலீசுக்கு பயந்து காப்பு காட்டில் விட்டு சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு 43 ஆடுகள் திருட்டு போலீசுக்கு பயந்து காப்பு காட்டில் விட்டு சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Jan 2022 5:20 PM GMT (Updated: 12 Jan 2022 5:20 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்ட 43 ஆடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் போலீசுக்கு பயந்து காப்பு காட்டில் விட்டு சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

உளுந்தூர்பேட்டை

43 ஆடுகள் திருட்டு

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 35). இவர் அந்த கிராமத்தின் எல்லைப் பகுதியில் உள்ள அரசு சேவை மையம் கட்டிடம் அருகே பட்டி அமைத்து சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மேய்சலுக்காக அழைத்து சென்ற ஆடுகளை மாலையில் பட்டியில் கணேசன் அடைத்து வைத்தார். பின்னர் நேற்று அதிகாலை ஆடுகளை பார்க்க பட்டிக்கு சென்றபோது அங்கு குட்டிகள் மட்டுமே இருந்தன. 43 ஆடுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் இதுகுறித்து உடனடியாக உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் ஆடுகள் மாயமான இடத்ததை ஆய்வு செய்தபோது அங்கே லாரி வந்து சென்றதற்கான டயர் தடங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். 

காப்புகாட்டில் விட்டு சென்றனர்

இதனால் பொங்கல் பண்டிகைக்காக ஆடுகளை திருடிய மர்ம நபர்கள் அவற்றை லாரியில் ஏற்றி  விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கால்நடை சந்தை நடைபெறும் இடங்களை தீவிரமாக கண்காணித்தனர். 
இந்த நிலையில் சிறுபாக்கம் அருகே உள்ள அங்கனூர் காப்புக்காடு பகுதியில் மர்மநபர்கள் சிலர் லாரியில் ஏற்றி வந்த ஆடுகளை இறக்கிவிட்டு சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

உடனே போலீசார் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது அந்த ஆடுகள் கணேசனுக்கு சொந்தமானது என்பதும், போலீசார் தேடுவதை அறிந்த மர்மநபர்கள் எங்கே போலீசில் மாட்டிக்கொள்வோமோ என பயந்து ஆடுகளை காப்புகாட்டில் விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

வலைவீச்சு

இதையடுத்து மீட்கப்பட்ட 43 ஆடுகளையும் கணேசனிடம் ஒப்படைத்த போலீசார் ஆடுகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.  திருடுபோன 5 மணி நேரத்தில் ஆடுகள் மீட்கப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story