திண்டுக்கல்லில் கரும்பு விற்பனை மும்முரம்


திண்டுக்கல்லில் கரும்பு விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 12 Jan 2022 11:09 PM IST (Updated: 12 Jan 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையையொட்டி திண்டுக்கல்லில் கரும்பு விற்பனை மும்முரமாக நடந்தது.

திண்டுக்கல்:


பொங்கல் பண்டிகை 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றதும், அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான். 

கரும்பு சாகுபடியை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டம் முக்கிய இடம் பிடித்துள்ளது. சாணார்பட்டி, நத்தம், செட்டிநாயக்கன்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

இவை விளைச்சல் அடைந்ததால் கடந்த மாதமே அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரத் தொடங்கின. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால் நேற்று அதிக அளவில் கரும்பு அறுவடை செய்யப்பட்டது.

 இதையடுத்து திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கரும்பு அனுப்பி வைக்கப்பட்டது.

விற்பனைக்கு குவிந்த கரும்பு 

 திண்டுக்கல்லை பொறுத்தவரை காந்தி மார்க்கெட், மெயின்ரோடு, நாகல்நகர் உள்பட பல பகுதிகளில் கரும்பு விற்பனைக்காக குவிக்கப்பட்டன. அதிலும் விவசாயிகளை நேரடியாக கரும்பை கொண்டு வந்து விற்பனை செய்தனர். 

எனினும் கரும்பு விற்பனை நேற்று காலையில் மந்தமாகவே இருந்தது. மாலையில் கரும்பு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டன.

இதற்கிடையே திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு, பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் படி எனும் பொங்கல் சீர் பொருட்கள் வழங்குவது தமிழர் பண்பாடு ஆகும். 

எனவே நேற்றைய தினம் பலர் தங்களுடைய மகள்களுக்கும், சகோதரர்கள் தங்களுடைய சகோதரிகளுக்கும் பொங்கல் படி பொருட்களை வழங்கினர்.
இதற்காக கரும்பு, வாழைத்தார், பொங்கல் பொருட்கள், பொங்கல் வைக்க புதிய பானை, காய்கறிகளை வாங்கி கார், ஆட்டோக்களில் கொண்டு சென்றனர். இதனால் நேற்று கரும்பு மட்டுமின்றி காய்கறிகளின் விற்பனையும் மும்முரமாக நடந்தது.

Next Story