போகி பண்டிகையில் பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்-கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்


போகி பண்டிகையில் பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்-கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2022 11:12 PM IST (Updated: 12 Jan 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் போகி பண்டிகையில் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தியுள்ளார்.

தர்மபுரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நச்சுப்புகை மூட்டம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான இன்று (வியாழக்கிழமை) போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது பழைய பொருட்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இந்த பழக்கம் சுற்று சூழலுக்கு பெரிய தீமையை ஏற்படுத்தாது.
ஆனால் இப்போது மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கும்போது நச்சுப்புகை மூட்டம் உருவாகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு, கண், மூக்கு எரிச்சல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
கடும் நடவடிக்கை
நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களை தடை செய்த உயர் நீதிமன்றம் பழைய மரம், வறட்டி ஆகியவற்றை தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடைவிதித்துள்ளது. இந்த தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
எனவே தர்மபுரி மாவட்டத்தில் போகி பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பொங்கல் திருநாளை மாசு இல்லாத வகையில் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story