கிருஷ்ணகிரியில் ரூ.339 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி-மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரியில் ரூ.339 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
குருபரப்பள்ளி:
புதிய மருத்துவக்கல்லூரி
கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போலுப்பள்ளியில் 46.03 ஏக்கர் பரப்பளவில் ரூ.338 கோடியே 95 லட்சத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதையொட்டி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, குத்துவிளக்கேற்றினார். அவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, டாக்டர் செல்லக்குமார் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
700 படுக்கை வசதிகள்
இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் கூறுகையில், கிருஷ்ணகிரியில் 700 படுக்கை வசதிகள் மற்றும் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையுடன் செயல்படக்கூடிய மருத்துவக்கல்லூரி ரூ.338 கோடியே 95 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.195 கோடியும், மாநில அரசு ரூ.143.95 கோடியும் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளன என்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சாத்விகா, உதவி கலெக்டர் சதீஸ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மணிமேகலை, முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், சத்யா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி, உதவி பொறியாளர் பழனிசாமி, துணை ஆட்சியர் அபிநயா மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story