பேரிகை அருகே மலைப்பாதையில் 2 லாரிகள் கவிழ்ந்தன-டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்


பேரிகை அருகே மலைப்பாதையில் 2 லாரிகள் கவிழ்ந்தன-டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Jan 2022 11:13 PM IST (Updated: 12 Jan 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே மலைப்பாதையில் 2 லாரிகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இந்த விபத்தில் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

ஓசூர்:
லாரிகள் கவிழ்ந்தன
கர்நாடக மாநிலம் கவுரிபிதனூர் என்ற இடத்திலிருந்து நேற்று முன்தினம் மக்காச்சோளம் பாரம் ஏற்றி கொண்டு 2 லாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நோக்கி வந்து கொண்டிருந்தன. நள்ளிரவில் பேரிகை அருகே ராமன்தொட்டி மலைப்பாதை வளைவில் திரும்பியபோது அந்த லாரிகளில் ஒன்று திடீரென நிலைதடுமாறி சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
தொடர்ந்து பின்னால் வந்த லாரியும் பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரிகள் அடுத்தடுத்து கவிழ்ந்ததில் அதில் இருந்த மக்காச்சோளங்கள் சிதறின. 
டிரைவர்கள் காயம்
இந்த விபத்தில் தும்கூரு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்கள் சிவக்குமார் (வயது 22), ரவிக்குமார் (25), கிளீனர் மது (23) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் கிரேன் உதவியுடன் 2 லாரிகளையும் மீட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரிசி பாரம் ஏற்றி வந்த லாரி அதே பள்ளத்தில் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story