சூளகிரி அருகே மின்சாரம் தாக்கி ராணுவ வீரரின் 4 வயது மகள் பலி


சூளகிரி அருகே மின்சாரம் தாக்கி ராணுவ வீரரின் 4 வயது மகள் பலி
x
தினத்தந்தி 12 Jan 2022 11:13 PM IST (Updated: 12 Jan 2022 11:13 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே மின்சாரம் தாக்கியதில் ராணுவ வீரரின் 4 வயது மகள் பலியானாள்.

சூளகிரி:
ராணுவ வீரரின் மகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 35). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, 4 வயதில் தட்சண்யா என்ற மகள் இருந்தாள். தற்போது கோபி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
சிறுமி தட்சண்யா நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு நடப்பட்டிருந்த இரும்பு குழாயை தொட்டபோது, அவளை மின்சாரம் தாக்கியது. இதில் சிறுமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தாள்.
மின்சாரம் தாக்கி சாவு
அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி பரிதாபமாக இறந்தாள். சிறுமியின் உடலை பார்த்து ராணுவ வீரர் கோபி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரித்தனர். 
அதில் வீட்டின் அருகே இருந்த மின்கம்பங்களில் குரங்குகள் விளையாடியதால், மின் கம்பிகள் தொய்ந்து, அங்கு நடப்பட்டிருந்த எர்த் இரும்பு குழாயில் உரசியதும், அதனை சிறுமி தட்சண்யா தொட்டபோது மின்சாரம் தாக்கி இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story