மாவட்ட செய்திகள்

விபத்தில் மீன்வியாபாரி உள்பட 2 பேர் பலி + "||" + Two people, including a fishmonger, were killed in the accident

விபத்தில் மீன்வியாபாரி உள்பட 2 பேர் பலி

விபத்தில் மீன்வியாபாரி உள்பட 2 பேர் பலி
தேவகோட்டை அருகே மீன் ஏற்றி வந்த வேன்-மோட்டார் சைக்கிள் மோதலில் மீன்வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேவகோட்டை,

தேவகோட்டை அருகே மீன் ஏற்றி வந்த வேன்-மோட்டார் சைக்கிள் மோதலில் மீன்வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சானாவயல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 49). விவசாயி. தேவகோட்டை மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (53). மீன் வியாபாரி.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு முருகன் தனது மோட்டார் சைக்கிளில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (27) என்பவருடன் கருமொழியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்ட பின்னால் கண்ணதாசன் அமர்ந்திருந்தார்.

2 பேர் பலி

இவர்கள் இருவரும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புளியால்-திடக்கோட்டை பகுதியில் சென்றனர். அப்போது எதிரே தொண்டியில் இருந்து மீன் பாரம் ஏற்றிக்கொண்டு தேவகோட்டைக்கு சரவணன் ஓட்டி வந்த வேன், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேேய துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னால் உட்கார்ந்திருந்த கண்ணதாசன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
 விபத்தின் போது வேனை திடீரென்று பிரேக் போட்டதால் ஸ்டியரிங் சரவணனின் நெஞ்சு பகுதியில் குத்தியதில் டிரைவர் இருக்கையில் உட்கார்ந்திருந்த நிலையிலேயே அவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தேவகோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.