மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்


மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2022 6:51 PM GMT (Updated: 12 Jan 2022 6:51 PM GMT)

காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர், 
ஆர்ப்பாட்டம்
கரூர்-கோவை ரோட்டில் உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சாமானிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் சக்திவேல், திராவிடர் விடுதலைக்கழகம் சண்முகம், நீர்வளம் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு கூட்டமைப்பு ராஜசேகர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது:-
நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் தொடர்ச்சியாக மணல் எடுக்கப்பட்டதின் விளைவாக 20 அடி ஆழம் வரை பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றுப்பகுதியில் பாறை கரடுகளாகவும், சீமைக்கருவேல புதர்கள் மண்டி கப்பி மணல் திட்டுகளாக காட்சி அளிக்கிறது. மேலும் காவிரி ஆற்றின் கரையில் உள்ள நூற்றுக்கணக்கான பாசன கிணறுகள் நிலத்தடி நீரை சார்ந்துதான் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையை நிறைவு செய்யும் நீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. இச்சூழ்நிலையில் காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story