தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ஒரு தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் எதிரே மாநகராட்சியின் பொது கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையை முறையாக பராமரிக்காததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நாய்களின் இருப்பிடமாக மாறி வருவதால் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, கழிப்பறையை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
தெருவிளக்கு எரியவில்லை
கீழ ஆசாரிபள்ளம் அரசு நடுநிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள புதுத்தெருவின் முகப்பில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரமும், அதிகாலையிலும் அந்த வழியாக பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பழுதடைந்த விளக்கை மாற்றி புதிய விளக்கை அமைத்து எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-ஆன்டணி சதீஷ், ஆசாரிபள்ளம்.
ஆபத்தான நிலையில் கூண்டு பாலம்
மயிலாடி அழகப்பபுரம் நெடுஞ்சாலையின் குறுக்கே, தோவாளை கால்வாயில் இருந்து மருந்துவாழ்மலைக்கு பிரதான கால்வாய் செல்வதால் கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் அடிப்பகுதியில் பல இடங்களில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், கூண்டு பாலத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் உறுதி தன்மையை ஆராய்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.
-த.விசாகன், அனந்தபத்மநாபபுரம்.
நடவடிக்கை தேவை
மார்த்தாண்டம் பஸ்நிலையம் மற்றும் மேம்பாலத்தில் உள்ள பஸ்நிறுத்தம் ஆகிய இடங்களில் பயணிகள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கையில் சில வாலிபர்கள் அமர்ந்து கொண்டு பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை கேலி செய்கின்றனர். இதனால், மாணவிகள் பெரும் அச்சத்துடனேேய வந்து செல்கின்றனர். எனவே, மாணவிகளின் நலன் கருதி காலை-மாலை நேரங்களில் பஸ்நிலையம், மேம்பால நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், மார்த்தாண்டம்.
இடையூறான மின்கம்பம்
காட்டுப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பிராமணக்கோணத்தில் இருந்து உச்சம்பாறை, கண்ணகி நகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்களால் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் அடிக்கடி சேதமடைகின்றது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடையூறான மின் கம்பத்தை சாைலயோரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.மதன், காட்டுப்புதூர்.
Related Tags :
Next Story