சேதுபாவாசத்திரம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி


சேதுபாவாசத்திரம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 12 Jan 2022 8:19 PM GMT (Updated: 12 Jan 2022 8:19 PM GMT)

சேதுபாவாசத்திரம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 
தென்னை சாகுபடி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பொங்கல் நேரத்தில் கஜா புயலால் பட்டுக்கோட்ட, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், ஒரத்தநாடு பகுதியில் ஏராளமான தன்னை மரங்கள் சாய்ந்தன. 
இதனால் தென்னை விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் கடந்த 2019-ம் ஆண்டு இந்த பகுதி விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்தனர். கடந்த ஆண்டு பெய்த கனமழை, கொரோனா தாக்குதல் போன்றவை இப்பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த இடையூறை அளித்தது. இதனால் சேதுபாவாசத்திரம் பகுதி விவசாயிகள் மிகுந்த பண நெருக்கடியில் சிக்கி தவித்தனர். 
தேங்காய் விலை வீழ்ச்சி
தற்போது கடைமடை பகுதியில் காலம்தாழ்த்தி சாகுபடி செய்துள்ளதால் அறுவடை பணிகள் தொடங்கவில்லை. கடந்தமாதம் இறுதிவரை தொடர்மழை பெய்ததால் கடைமடை விவசாயிகள் தென்னை சாகுபடியை முழுமையாக நம்பியிருந்தனர். 
ஆனால் கடந்த மாதம் வரை ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தேங்காய் தற்போது ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தேங்காயை விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெட்டப்பட்ட தேங்காய்கள் ஆங்காங்கே தோட்டங்களில் குவித்து வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். 

Next Story