தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் 50 சதவீதம் நிறைவு
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்தார்.
ஆய்வு
தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழகஅரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர், தஞ்சை அருளானந்தநகர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி, புதிய பஸ் நிலையம் அருகே பல்நோக்கு அரங்கம் அமைக்கும் பணி, ஆம்னி பஸ் நிலையம் அமைக்கும் பணி, பழைய கலெக்டர் அலுவலக கட்டிட அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
அரண்மனை வளாகம்
பின்னர் அவர், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட தஞ்சை ராஜப்பா பூங்கா, மணிக்கூண்டு, பழைய பஸ் நிலையம், மாநகராட்சி வணிக வளாகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். தொடர்ந்து அவர், தஞ்சை அரண்மனை வளாகம் புதுப்பிக்கும் பணி, தஞ்சை மேலவீதி, தெற்குஅலங்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அரசு கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் 11 இடங்களில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டது. தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்து இருக்கிறோம்.
புதிய தார்சாலை
ஆம்னி பஸ் நிலையம், சில சாலைகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் பணிகளை பார்த்து இருக்கிறோம். விரைவில் பணிகளை மாநகராட்சி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம். சாலை போடும்போது பழைய தாரை அகற்றிவிட்டு புதிதாக தார்சாலை போட வேண்டும். சாலையின் அளவு அதிகரிக்கக்கூடாது. இல்லையெனில் மழைநேரத்தில் சாலையில் செல்லும் தண்ணீர் கட்டிடத்திற்குள் புகுந்துவிடும்.
பணிகளை பொறுத்தவரை ஒரு மாதத்தில் ரூ.30 கோடி செலவு செய்ய வேண்டும். ஆனால் கொரோனா, மழையின் காரணமாக பணிகள் தாமதமாக நடப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். விரைவில் பணிகள் வேகமாக நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ரூ.1000 கோடியில் பணிகள் நடக்கிறது. இவற்றில் ரூ.500 கோடி மாநிலஅரசின் பங்கு. ரூ.500 கோடி மத்தியஅரசின் பங்காகும்.
15 மாதங்கள்
இதுவரை 50 சதவீத பணி முடிவடைந்துள்ளது. இன்னும் 15 மாதங்களில் மீதமுள்ள பணிகளை முடிக்க வேண்டும். பஸ் நிலையத்தில் கடைகள், கழிவறை இருக்கிறது என்றால் அதை முறையாக பராமரிக்க வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறை முறையாக பராமரிக்கப்படவில்லை. தற்போது புதிதாக 2 கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது. இவைகள் விரைவாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஸ்மார்ட்சிட்டியின் நோக்கம் அந்த நகரில் அடிப்படை வசதிகள் நன்றாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனர் பிரதீப்குமார், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பேரூராட்சிகள் இணை இயக்குனர் (திட்டம்) மலையம்மான் திருமுடிகாரி, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கனகராஜ், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். பின்னர் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story