இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் சிறப்பு திட்டம்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு


இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் சிறப்பு திட்டம்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 9:20 PM GMT (Updated: 12 Jan 2022 9:20 PM GMT)

கர்நாடகத்தில் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பட்ஜெட்டில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

இறந்த பிறகு வாழ்க்கை

கர்நாடக அரசு சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

இளைஞர்களுக்காக தத்துவங்களின் அடிப்படையிலான அதிக உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. இந்த நோக்கத்தில் இளைஞர்களின் மேம்பாட்டிற்காக வருகிற பட்ஜெட்டில் ஒரு சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும். நமது வாழ்க்கையில் சுவாமி விவேகானந்தர் எப்போதும் உள்ளார். அர்த்தமுள்ள சாதனை வாழ்க்கையை அவர் வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார். சுவாமி விவேகானந்தர், இறந்த பிறகு வாழ்க்கை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இளைஞர்களுக்கு அவசியம்

இறந்த பிறகும் வாழ்க்கை என்பது குறித்த அவரது கற்பனை அற்புதமானது. சாதனையாளருக்கு சாவு இறுதி அல்ல. இறந்த பிறகும் வாழ்க்கையை வாழ்வது சாதனை என்பதை அவர் கூறியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை கோட்பாடுகளை இளைஞர்களுக்கு எடுத்துக்கூறுவது அவசியம்.

 அரசு மற்றும் சமுதாயம் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.
ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி, சுவாமி விவேகானந்தரின் கொள்கை-கோட்பாடுகளை மக்களுக்கு தெரிவிக்கும் பணியை ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பு செய்து வருகிறது. எங்கு விவேகம் இருக்கிறதோ அங்கு மகிழ்ச்சி இருக்கும். 

இந்த விவேகத்தை நாம் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். அவரது கொள்கை-கோட்பாடுகள் எல்லைகளை தாண்டி சென்றுள்ளன. வெற்றியில் சுவாமி விவேகானந்தருக்கு அபாரமான நம்பிக்கை இருந்தது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

விழாவில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், இளைஞர் நலத்துறை மந்திரி நாராயணகவுடா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story