காங்கிரசின் பாதயாத்திரைக்கு கர்நாடக அரசு தடை


காங்கிரசின் பாதயாத்திரைக்கு கர்நாடக அரசு தடை
x
தினத்தந்தி 12 Jan 2022 9:41 PM GMT (Updated: 12 Jan 2022 9:41 PM GMT)

கர்நாடக ஐகோர்ட்டு கண்டனத்தை தொடர்ந்து காங்கிரசின் பாதயாத்திரைக்கு தடை விதித்தும், மீறினால் கைது செய்யவும் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடக ஐகோர்ட்டு கண்டனத்தை தொடர்ந்து காங்கிரசின் பாதயாத்திரைக்கு தடை விதித்தும், மீறினால் கைது செய்யவும் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காங்கிரஸ் பாதயாத்திரை

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருேக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்துள்ளது.இந்த திட்டத்தை 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு கர்நாடக அரசு அனுப்பிவைத்துள்ளது. இதற்கு தமிழகம் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இதனால் மேகதாது திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை. இந்த நிலையில் மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை கடந்த 9-ந் தேதி ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா சங்கமத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

3 வழக்குகள் பதிவு

நேற்று 4-வது நாள் பாதயாத்திரை நடைபெற்றது. கர்நாடக அரசின் தடை உத்தரவை மீறி இந்த பாதயாத்திரை நடக்கிறது. தடையை மீறி பாதயாத்திரை நடத்தியதாக சாத்தனூர், கனகபுரா டவுன் போலீஸ் நிலையங்களில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா, டி.கே.சுரேஷ் உள்ளிட்டோர் மீது தனித்தனியாக 3 வழக்குகள் பதிவாகி உள்ளது. 

மேலும் இந்த பாதயாத்திரையின் போது டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசிய உதவி கலெக்டர் ஜவரேகவுடாவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அத்துடன் பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்களான எச்.எம்.ரேவண்ணா, மேல்-சபை உறுப்பினர் சி.எம்.இப்ராகிம், காங்கிரஸ் கட்சி கொறடா அஜய்சிங் உள்ளிட்டோருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. 

தடை கோரி மனு

இருப்பினும் காங்கிரசார் தொடர்ந்து பாதயாத்திரை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பாதயாத்திரையை கைவிடுமாறு அரசு வேண்டுகோள் விடுத்தது. இதை காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்துவிட்டனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரைக்கு தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் நாகேந்திரபிரசாத் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கொரோனா பரவல் தீவிரம்

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் அரவிந்த் காமத் வாதிடுகையில் கூறியதாவது:-
"கொரோனா வைரஸ் பரவக்கூடிய இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி விதிமுறைகளை மீறி பாதயாத்திரை நடத்துவது பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு விதிமுறைகளை கர்நாடக காங்கிரஸ் கட்சி பின்பற்றவில்லை. 

இந்த பாதயாத்திரை மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடையும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இந்த பாதயாத்திரையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள். அவர்கள் பங்கேற்றுவிட்டு தங்கள் பகுதிக்கு செல்கிறார்கள். அவ்வாறு செல்லும்போது கொரோனா பரவல் தீவிரமடையும். எனவே பாதயாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும்."
இவ்வாறு அவர் வாதிட்டார்.

அரசால் தடுக்க முடியவில்லையா?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "கொரோனா பரவி வரும் நிலையில் பாதயாத்திரை நடத்த அரசு அனுமதி அளித்ததா?. எந்த அடிப்படையில் பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை தடுக்க அரசால் முடியவில்லையா?. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா?" என்று மனுதாரரை பார்த்து கேள்வி எழுப்பினர். 

அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் சுப்பிரமணியா, "பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ராமநகர் மாவட்ட கலெக்டர், இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

நீதிபதிகள் உத்தரவு

அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், "நீங்கள் (அரசு) வேடிக்கை பார்க்கிறீர்களா?. உங்களால் பாதயாத்திரையை தடுக்க முடியவில்லையா?. கொரோனா பரவக்கூடிய இந்த சூழ்நிலையில் இது பொது நலனுக்காக நடத்தப்படக்கூடியது அல்ல என்று நன்றாக தெரிகிறது. இருப்பினும் பாதயாத்திரையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" என்று கண்டனம் தெரிவித்தனர். 

இது தொடர்பாக கர்நாடக அரசு, 14-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை 14-ந் தேதிக்கு (நாளை) ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து கனகபுராவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

"போராட்டம் நடத்துவது எங்களது உரிமை. காங்கிரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி இருப்பதாக தகவல் வந்துள்ளது. எங்கள் கட்சியின் சட்ட அணி உரிய பதிலை ஐகோர்ட்டில் தெரிவிக்கும். ஒருவேளை ஐகோர்ட்டு பாதயாத்திரைக்கு தடை விதித்து உத்தரவிட்டால் அந்த உத்தரவை மதித்து பாதயாத்திரையை நிறுத்துவோம். நாங்கள் இந்த மண்ணின் சட்டத்தை மதிக்கிறோம். பா.ஜனதா தான் சட்டங்களை மதிப்பதில்லை.

வழக்கு பதிவு செய்யவில்லை

நாங்கள் அரசுக்கு தகவல் தெரிவித்துவிட்டே பாதயாத்திரையை தொடங்கியுள்ளோம். இதுகுறித்து அரசு எங்களிடம் எதுவும் பேசவில்லை. பா.ஜனதாவை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் சொந்த தொகுதிகளில் அதிக கூட்டங்களை கூட்டி விதிமுறைகளை மீறியுள்ளனர். அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்யவில்லை. ஆனால் இந்த அரசு காங்கிரசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. நாட்டில் கொரோனா பரவ பிரதமர் மோடியே காரணம். அவர் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டார். இதன் மூலமே கொரோனா வேகமாக பரவியது. 
இவ்வாறு அவர் கூறினார். 

அவசர ஆலோசனை

இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தனது வீட்டில் இருந்தபடி மூத்த மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள், அட்வகேட் ஜெனரலுடன் அவசர ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்தில், ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்து இருப்பது குறித்தும், பாதயாத்திரையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில், காங்கிரசின் பாதயாத்திரைக்கு தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது. 

பாதயாத்திரைக்கு தடை

இந்த கூட்டத்தை தொடர்ந்து கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார் நேற்றிரவு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

"கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்தி வருகிறது. தடையை மீறியும், அரசின் உத்தரவை மீறியும் இந்த பாதயாத்திரை நடந்து வருகிறது.  இதுகுறித்து ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. 

அதனால் கர்நாடகத்தில் காங்கிரசின் பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்த ராமநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை மீறும்பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்ய வாய்ப்பு

காங்கிரசின் பாதயாத்திரைக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டு இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) தொடர்ந்து பாதயாத்திரை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஒருவேளை பாதயாத்திரையை காங்கிரசார் தொடர்ந்து நடத்தினால் அவர்களை கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

போலீஸ் குவிப்பு

இதற்கிடையே அரசின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரசின் பாதயாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்கள் பாதயாத்திரைக்கு அரசு தடை விதித்துள்ளது. எங்களுக்கு எத்தனை தடை விதித்தாலும், அதை மீறி பாதயாத்திரையை தொடருவோம் என்று திட்டவட்டமாக கூறினார். 
இதனால் ராமநகரில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story