உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் கேட்ட வங்கி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 13 Jan 2022 4:38 AM GMT (Updated: 13 Jan 2022 4:38 AM GMT)

அரசு உதவித்தொகையை பெற உயிருடன் இருப்பதற்கு சான்றிதழ் கேட்ட வங்கியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் உயிருடன் இருப்பதற்கான ஆவணங்களை முதியவர் ஒருவர் தேடி அலைந்தார்.

ஜெயங்கொண்டம்
சான்றிதழ் கேட்ட வங்கி 
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). வயது மூப்பின் காரணமாக அரசு வழங்கும் உதவித்தொகை ரூ.ஆயிரத்தை வைத்து வாழ்ந்து வரும் நிலையில், இந்த மாதம் பணம் எடுக்க சேவை மையத்தை நாடியுள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணம் இருந்த நிலையில் கைரேகை பதிவு ஆகாததால் எடுக்க முடியவில்லை. இதனால் அடுத்த கட்டமாக ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு நேரடியாக சென்று காசோலை எழுதி கொடுத்து பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி நீங்கள் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தன் என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரியிடம் கேட்டபோது, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி வருமாறு கூறியுள்ளார். 
தாசில்தார் உறுதி
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்தபோது அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வழங்கியிருக்கிறார். அதனை கொண்டு சென்று வங்கி நிர்வாகத்திடம் அளித்தபோது, வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்து மீண்டும் தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க அறிவுறுத்தியுள்ளனர். 
இதனையடுத்து தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க 72 வயதுடைய முதியவர் கோவிந்தன் ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ஆனந்தன், வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், மேற்கொண்டு அரசு வழங்கும் 1,000 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தார். 
சந்தேகம் 
இதையடுத்து கோவிந்தன் தாசில்தாருக்கு நன்றி தெரிவித்து வீடு திரும்பினார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதே ஊரில் பச்சமுத்து மகன் கோவிந்தன் என்பவர் இறந்து போனதற்கு பதிலாக பேச்சிமுத்து மகன் கோவிந்தன் என்பவர் இறந்ததாக தவறுதலாக பதிந்திருக்கலாமோ? என்றும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தான் இதற்கு காரணமாக இருக்குமோ? எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
 இந்த சம்பவம் முத்துவாஞ்சேரி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பதிவை தவறுதலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிந்து இருந்தால் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story