நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா


நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா
x
தினத்தந்தி 13 Jan 2022 2:02 PM GMT (Updated: 13 Jan 2022 2:02 PM GMT)

நவத்திருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

தென்திருப்பேரை:
நவத்திருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 
நவதிருப்பதி கோவில்கள்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற வைணவதிருப்பதிகளில் ஒன்றான நவத்திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் (கள்ளபிரான்), நத்தம் (எம் இடர்கடிவான்), திருப்புளியங்குடி (காய்சினவேந்தபெருமாள்), தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), பெருங்குளம் (மாயக்கூத்தர்), தென்திருப்பேரை (நிகரில் முகில்வண்ணன்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), ஆழ்வார்திருநகரி (பொலிந்துநின்றபிரான்) ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசி மார்கழி திருஅத்யயன திருவிழா பகல்பத்து, இராப்பத்து திருவிழா என 21 நாட்கள் நடைபெறுகிறது. 
வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் நேற்று காலை 4 மணி முதல் ஆதிசேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்திலும் தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), நின்ற திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு சுவாமிகள் தாயார்களுடன் காட்சியளித்தனர். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சயனகுரடு மண்டபத்தில் சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.  திரளான பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். 
 திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தக்கார் அஜித், ஆய்வாளர்கள் நம்பி மற்றும் பிரமுகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்டேசன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.


Next Story