மாவட்ட செய்திகள்

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + Heaven s Gate Opening at Perumal Temples

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஊட்டி

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரு மாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊட்டி பழைய அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. 

இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற படி சாமி தரிசனம் செய்தனர். 

நிகழ்ச்சியை ஒட்டி சொர்க்கவாசலுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வழக்கமாக வைகுண்ட ஏகாதசியை ஒட்டி முக்கிய வீதிகளில் பெருமாள் வீதி உலா வருவார். தொற்று பரவல் காரணமாக சுவாமி வீதி உலாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கோவிலுக்குள் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை சாமி தரிசனம் செய்தனர். 

பக்தர்கள் சாமி தரிசனம்

ஊட்டி புது அக்ரஹாரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கீழ் இயங்கும் வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபால சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அதேபோல் ஊட்டி அருகே எச்.பி.எப். பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணி, ஊட்டி வண்ணாரப்பேட்டை பெருமாள் கோவிலில் 5 மணி மற்றும் குன்னூர் வண்டிச்சோலையில் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

கூடலூர் பெருமாள் சன்னதி

கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள வெங்கடேச பெரு மாள் சன்னதியில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், 5 மணிக்கு மூலவர் மற்றும் வெங்கடேச பெருமாளுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்த வெள்ளிக் கவசங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வெங்கடேச பெருமாள் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பரமபதம் எனும் சொர்க்க வாசலுக்குள் வெங்கடேச பெருமாள் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

சுவாமி வீதி உலா

அப்போது கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் சொர்க்க வாசலுக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கூடலூர் புத்தூர் வயல், பொன்னானி மகாவிஷ்ணு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிற பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக சுவாமி வீதி ஊர்வலம் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. அதன் காரணமாக பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறந்த உடன் சிறிது தூரம் மட்டும் சுவாமி வீதிஉலா நடந்தது.