மாவட்ட செய்திகள்

ஊட்டியில் மண்பானை கரும்பு விற்பனை அமோகம் + "||" + Manpanai sugarcane sales in Ooty are skyrocketing

ஊட்டியில் மண்பானை கரும்பு விற்பனை அமோகம்

ஊட்டியில் மண்பானை  கரும்பு விற்பனை அமோகம்
பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் மண்பானை, கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.


ஊட்டி, 

பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டியில் மண்பானை, கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

கரும்பு விற்பனை

  தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் நீங்கா இடம் பெறுவது கரும்பு ஆகும். நீலகிரி மலை மாவட்டம் என்பதால், இங்கு கரும்பு விளைவது இல்லை. இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

  இந்த நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு நேற்று சேலத்தில் இருந்து விற்பனைக்காக லாரி மூலம் கரும்புகள் கொண்டு வரப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வியாபாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் கரும்பு விற்பனை மந்தமாக இருந்தது. ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ.850-க்கும், ஒரு கரும்பு ரூ.60 முதல் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆர்வமுடன் வாங்கினர்


  இந்த பண்டிகையின் போது மண்பானையில் பொங்கல் வைப்பது வழக்கம். இதன் காரணமாக ஊட்டி மார்க்கெட்டில் பொங்கல் வைப்பதற்கு சிறியது முதல் பெரிய அளவிலான மண்பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அளவுக்கு ஏற்ப ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனையானது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

  அதுபோன்று கோலப்பொடி, பூ, பழங்கள், மா இலை, வேப்ப இலை மற்றும் பூஜைப் பொருட்களை வாங்கி சென்றனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால், மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

விற்பனை குறைவு

  இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கடந்த ஆண்டு 2 லாரிகளில் கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. நடப்பாண்டில் விற்பனை குறைவு என்பதால் ஒரு லாரியில் கொண்டு வரப்பட்டு உள்ளது. வேப்ப மற்றும் ஆவரை இலை ரூ.25, வாழைக்கன்று ரூ.20 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வந்தும் விற்பனை சூடுபிடிக்காமல் உள்ளது என்றனர்.