தனியார் கல்லூரி உரிமையாளரிடம் ரூ 11 ½ லட்சம் மோசடி


தனியார் கல்லூரி உரிமையாளரிடம் ரூ 11 ½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 13 Jan 2022 2:51 PM GMT (Updated: 13 Jan 2022 2:51 PM GMT)

கேரளாவை சேர்ந்த தனியார் கல்லூரி உரிமையாளரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்ததாக சேலத்தை சேர்ந்த பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

ஊட்டி

கேரளாவை சேர்ந்த தனியார் கல்லூரி உரிமையாளரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்ததாக சேலத்தை சேர்ந்த பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

ஊட்டியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:- 

தனியார் கல்லூரி

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பால்தாமஸ் (வயது 44) என்பவர் அறிவியல் மேலாண்மை தொழில்நுட்ப கல்லூரி நடத்தி வந்தார். தனது கல்லூரியை விற்பனை செய்வது குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பதிவிட்டார். இதனை பார்த்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் பால்தாமசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். 

அப்போது அவர்கள், கல்லூரியை வாங்க முடிவு செய்து உள்ளதாகவும், அதற்காக ஊட்டிக்கு வந்து சந்தித்து பேச உள்ளதாகவும் அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பால்தாமஸ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊட்டி வந்தார். அதுபோன்று சேலத்தை சேர்ந்த 3 பேரும் வந்தனர். 

ரூ.11½ லட்சம் கொடுத்தார்

அவர்கள் 3 பேரும், ஊட்டி அருகே உள்ள காத்தாடி மட்டத்தில் உள்ள தங்கும் விடுதியில் பால்தாமசை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர் தனது கல்லூரியை ரூ.50 கோடிக்கு விற்பதாக கூறி உள்ளார். அதற்கு அவர்கள் பத்திரப்பதிவு செய்ய நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், அப்போதுதான் நாங்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்றும் கூறி உள்ளனர்.

இதை நம்பிய பால்தாமஸ் தன்னிடம் இருந்த ரூ.11½ லட்சத்தை கொடுத்தார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஊட்டியில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றனர். அப்போது அந்த 3 பேரும் பால் தாமசிடம் நீங்கள் ஓட்டலுக்குள் செல்லுங்கள், நாங்கள் காரை வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு வருவதாக கூறினார்கள். 

மோசடி

உடனே அவர் காரை விட்டு இறங்கி ஓட்டலுக்குள் சென்றார். ஆனால் அந்த 3 பேரும் வரவில்லை. இதையடுத்து அவர்களின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அவர் இது குறித்து ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் சேலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், முரளி, சிவா ஆகியோர் பால்தாமசை ஏமாற்றியது தெரியவந்தது. 

தனிப்படை சேலம் விரைவு

இதையடுத்து தலைமறைவான 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டு உள்ளது. அவர்கள் சேலத்தில் தலைமறைவாக இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து 3 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் சேலம் விரைந்து உள்ளனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story