மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் அலைமோதிய மக்கள் கூட்டம்பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியதுமுக்கிய சாலைகளில் வாகன நெரிசல் + "||" + Wave crowd at Dindigul Pongal products sales weeded out Traffic congestion on major roads

திண்டுக்கல்லில் அலைமோதிய மக்கள் கூட்டம்பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியதுமுக்கிய சாலைகளில் வாகன நெரிசல்

திண்டுக்கல்லில் அலைமோதிய மக்கள் கூட்டம்பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியதுமுக்கிய சாலைகளில் வாகன நெரிசல்
திண்டுக்கல்லில் அலைமோதிய மக்கள் கூட்டம் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது முக்கிய சாலைகளில் வாகன நெரிசல்
திண்டுக்கல்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை மக்கள் நேற்று வாங்கினர். அதன்படி திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு திண்டுக்கல் நகரில் குவிந்தனர்.
மேலும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்பட பொங்கலுக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கினர். ஒருசில கடைகளில் பொங்கலுக்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட அளவில் பார்சல் செய்து ரெடிமேடாக வைத்து இருந்தனர். அதையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதனால் திண்டுக்கல் கடைவீதி, மேற்கு ரதவீதியில் உள்ள பலசரக்கு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைப்பதற்கு பெரும்பாலான மக்கள் மண் பானைகளை வாங்கினர். ஒரு மண் பானை ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. எனினும் மக்கள் ஆர்வமுடன் அதை வாங்கி சென்றனர்.
கரும்பு விற்பனை 
அதேபோல் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பது கரும்பு ஆகும். எனவே சாணார்பட்டி, நத்தம், செட்டிநாயக்கன்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் திண்டுக்கல்லில் கரும்பு விற்பனையில் ஈடுபட்டனர். நாகல்நகர், காந்திமார்க்கெட், திருச்சி சாலை உள்பட நகரின் பல இடங்களில் கரும்புகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.
திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் திண்டுக்கல்லுக்கு வந்து கரும்பு வாங்கி சென்றனர். இதனால் நேற்று முன்தினம் ரூ.300 முதல் ரூ.400-க்கு விற்ற கரும்பு கட்டு நேற்று ரூ.500 வரை விற்பனை ஆனது. அதையும் மக்கள் பேரம்பேசி வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு வரை கரும்பு விற்பனை நடைபெற்றது.
மஞ்சள், கூரைப்பூ
இதுதவிர மஞ்சள் குலைகள் விற்பனைக்காக ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு இருந்தன. பொங்கல் வழிபாட்டில் மஞ்சள் குலை கட்டாயம் இடம்பெறுகிறது. எனவே மக்கள் மஞ்சள் குலைகளை வாங்கினர். ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. மேலும் கூரைப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை அடங்கிய ஒரு கட்டு ரூ.10-க்கு விற்பனை ஆனது.
இதுதவிர பொங்கல் தினத்தில் வீட்டு முற்றத்தில் பெண்கள் வண்ண கோலமிட்டு அழகு பார்ப்பார்கள். இதற்காக நகரில் பல இடங்களில் அனைத்து வண்ணங்களிலும் கோலப் பொடி விற்பனை நடந்தது. பெண்கள் தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் கோலப்பொடிகளை தேர்வு செய்து வாங்கினர்.
புத்தாடை
இதற்கெல்லாம் மேல் பொங்கல் திருநாளை புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். இதற்காகவே பல ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. எனவே புத்தாடைகள் வாங்குவதற்கு குடும்பம், குடும்பமாக மக்கள் ஜவுளிக்கடைகளில் குவிந்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என விரும்பிய ஆடைகளை தேர்வு செய்தனர். இதனால் திண்டுக்கல்லில் நேற்று அனைத்து ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு வீடுகளில் மக்கள் பலவித காய்கறி கூட்டுகளுடன் அறுசுவை உணவு சமைத்து உறவினர்களுக்கு கொடுத்து, தாங்களும் சாப்பிடுவார்கள். இதற்காக திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டம் திரண்டதால் காய்கறிகளின் விலை கணிசமான உயர்ந்தது.
வாகன நெரிசல் 
இதன் காரணமாக திண்டுக்கல்லில் நேற்று பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது. அதேநேரம் திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் திண்டுக்கல்லில் குவிந்ததால் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால போக்குவரத்து போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.