வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம்


வைகுண்ட ஏகாதசியையொட்டி  பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு  பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Jan 2022 4:04 PM GMT (Updated: 13 Jan 2022 4:04 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா’ கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.


முருகபவனம்:
மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 2 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு மூலவர் சாமிக்கு பால், பழம் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆழ்வார்களுக்கு மரியாதை சம்பிரதாயங்கள் நடைபெற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், நாகல்நகர் வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி பெருமாள் கோவிலில் நேற்று காலை 5.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி ரங்கநாதர் பள்ளிகொண்ட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்புவில் புகழ்பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதையடுத்து நேற்று அதிகாலை 5 மணிக்கு சவுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், அர்ச்சனை மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது. பின்னர் சன்னதியில் இருந்து சவுந்தரராஜபெருமாள் உற்சவர் புறப்பட்டு பிரகாரத்தை வலம் வந்தார். இதைத்தொடர்ந்து சொர்க்க வாசல் என்றழைக்கப்படும் பரமபத வாசலுக்கு பெருமாள் வந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அங்கு சவுந்தரராஜ பெருமாள் ஆழ்வார்களுக்கும், அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கும் தரிசனம் கொடுத்தார். சொர்க்கவாசலை திறந்துபோது பக்தர்கள் ‘கோவிந்தா....கோவிந்தா’ என சரண கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து கோவிலின் வடக்குப்புறம் உள்ள பரமபத மண்டபத்தில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணமாக முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அனிதா, செயல் அலுவலர் மாலதி, மற்றும் பட்டாச்சாரியார்கள் ராஜப்பா, ராமமூர்த்தி ஆகியோர் செய்து இருந்தனர்.
பழனி
பழனி லட்சுமி-நாராயண பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு லட்சுமி-நாராயண பெருமாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கருட வாகனத்தில் லட்சுமி-நாராயண பெருமாள் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வலம் வந்தார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதேபோல் பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கதிர் நரசிங்க பெருமாள் கோவில்
சாணார்பட்டி அருகேயுள்ள வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி கதிர்நரசிங்க பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் தங்க கவச வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் வேம்பார்பட்டி வேங்கடேச பெருமாள் கோவில், கோபால்பட்டி கிருஷ்ணர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.
வடமதுரை 
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதையொட்டி பெருமாள் கருட வாகனத்தில் சொர்க்கவாசல் வழியாக புறப்பாடாகி கோவிலை சுற்றி வந்து சன்னதியை அடைந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மகேஸ்வரி, செயல் அலுவலர் மாலதி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். இதுபோல நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா-ருக்குமணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. 


Next Story