வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உலகளந்த பெருமாள் தியாகதுருகம் சீனிவாசபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உலகளந்த பெருமாள் தியாகதுருகம் சீனிவாசபெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 4:24 PM GMT (Updated: 13 Jan 2022 4:24 PM GMT)

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், தியாகதுருகம் சீனிவாசபெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்


தியாகதுருகம்

சீனிவாச பெருமாள் 

தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா  சமூக இடைவெளியுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று அதிகாலை 4:30 மணியளவில் திருமஞ்சனமும், சிறப்பு ஆராதனையும், 5.30 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மூலவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

கருட வாகனத்தில்

உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் தோமதுரை பஜனை குழுவினருடன் ஊர்வலம் புறப்பாடு நடைபெற்றது. இந்த ஊர்வலம் தியாகதுருகம் கடைவீதி, வைசியர் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். 
நிகழ்ச்சியில் சமுதாய பராமரிப்பு கமிட்டி நிர்வாகிகள், மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், துளுவ வேளாளர் சங்க நிர்வாகி பழனிவேல், ஆரிய வைசியர் சங்க நிர்வாகி அபரஞ்சி, நாயுடுமார்கள் சங்க நிர்வாகி ரங்கராஜன், தியாகதுருகம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் நெடுஞ்செழியன், பேரூராட்சி முன்னாள் தலைவர் விஜயராஜி, துளுவவேளாளர் சங்க முன்னாள் தலைவர் வேல்முருகன், அ.தி.மு.க. நிர்வாகிகள் நகர பாசறை செயலாளர் கிருஷ்ணராஜ், வேல்நம்பி, தி.மு.க. நிர்வாகிகள் சிவக்குமார், புக்குளம் சங்கர், முரளிபாபு, தியாகதுருகம் தமிழ்ச்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் பிரபாகரன், பா.ஜ.க. நிர்வாகி பச்சையாப் பிள்ளை மற்றும் பலர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

உலகளந்த பெருமாள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 5.30 மணியளவில் கோவிலில் ஜீயர் முன்னிலையில் சொர்க்கவாசல் திறப்பு பக்தி கோஷத்துடன் நடைபெற்றது. அப்போது மேளதாளங்கள் முழங்க பெருமாள் சொர்க்கவாசல் மண்டபத்துக்குள் வந்தார். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை, அர்ச்சனை நடைபெற்றது. 
ஆனால் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகளால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இன்றி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு மேல் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதித்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு த.மா.கா. மாவட்ட தலைவர் கணேஷ் லட்டு பிராசதம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமி முன்னிலையில் விழாக் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

கோவிந்தராஜபெருமாள்

கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை முதல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு  சிறப்பு அலங்காரத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பெருமாள் 3 முறை கோவில் உட்பிரகாரத்தை வலம் வந்து கோவில் மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

ரிஷிவந்தியம்

அதேபோல் ரிஷிவந்தியம் ஒன்றியம் ஆதிதிருவரங்கத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள், சங்கராபுரம் மணிநதி அருகே உள்ள அலமேலு மங்கா சமேத வெங்கடேசபெருமாள், தேவபாண்டலம் சவுந்தரவல்லி தாயார் சமேத பார்த்தசாரதி பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story