விழுப்புரத்தில் 20 ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்


விழுப்புரத்தில் 20 ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Jan 2022 4:40 PM GMT (Updated: 13 Jan 2022 4:40 PM GMT)

விழுப்புரத்தில் 20 ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி, தாலிக்கு தங்கத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம், 

திருமண நிதி உதவி

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு காணை, கண்டமங்கலம், கோலியனூர், விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பட்டம், பட்டயம் படித்த 15 பயனாளிகள் மற்றும் 10, 12-ம் வகுப்பு படித்த 5 பயனாளிகள் என மொத்தம் 20 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை வழங்கி சிறப்புரையாற்றினார்.

வாழ்க்கை தரத்தைமேம்படுத்தி...

அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2,403 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 78 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் திருமண நிதி உதவியும், தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.8 கோடியே 65 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் 19.224 கிலோ கிராம் தங்க நாணயங்கள் என மொத்தம் ரூ.17 கோடியே 43 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக தற்போது 20 பேருக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் இத்திட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் திறப்பு

முன்னதாக விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததையடுத்து புதிய அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குத்துவிளக்கேற்றினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், பொதுப்பணித்துறை அதிகாரி பரிதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story