ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்


ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி  பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 13 Jan 2022 5:02 PM GMT (Updated: 13 Jan 2022 5:02 PM GMT)

ஊக்கத்தொகை வழங்கக்கோரி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இந்தநிலையில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டில் நோயாளிகளுக்கு பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே உள்ளே சென்று சிகிச்சை அளித்து வந்தனர். 
நேற்று முன்தினம் இரவு முதல் பயிற்சி மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்டு பல மாதங்கள் ஆன பின்பும் இக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு இதுவரையில் ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை. எனவே பிற அரசு மருத்துவக்கல்லூரிகளில் வழங்குவது போல், தங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்கள் தங்கியுள்ள கே.ஆர்.எம்.விடுதியில் தொற்று ஏற்பட்ட மாணவர்களுக்கும் தொற்று இல்லாத மாணவர்களுக்கும் ஒரே உணவகத்தில் உணவு வழங்கப்படுகிறது.

நோயாளிகள் அவதி

  இதனால் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கூறுகையில் தங்களது கோரிக்கைகள்  நிறைவேறும் வரையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். இதனால் நோயாளிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். 

Next Story