துணை ராணுவ வீரர் விபத்தில் சிக்கி பலி


துணை ராணுவ வீரர் விபத்தில் சிக்கி பலி
x
தினத்தந்தி 13 Jan 2022 5:13 PM GMT (Updated: 13 Jan 2022 5:13 PM GMT)

தேனி அருகே பொங்கல் பொருட்களை வாங்க வந்தபோது ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த துணை ராணுவ வீரர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

தேனி : 

துணை ராணுவ வீரர்
தேனி மாவட்டம் போடி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47). இவர் துணை ராணுவத்தில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி வந்தார். சென்னை தலைமை செயலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு வந்தார். பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி அவர் போடியில் இருந்து தேனிக்கு நேற்று வந்தார். பின்னர் மாலையில் தேனியில் இருந்து தனது ஸ்கூட்டரில் போடிக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

விபத்தில் பலி
தேனி-போடி சாலையில் துரைச்சாமிபுரம் காலனி அருகில் சென்று கொண்டிருந்த போது சாலையில் கிடந்த மண் சறுக்கியதில் ஸ்கூட்டரில் இருந்து அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது போடியில் இருந்து தேனி நோக்கி வந்த தனியார் கல்லூரி பஸ்சின் சக்கரம் அவர் மேல் ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் சுரேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான போடி திருமலாபுரத்தை சேர்ந்த முருகேசன் (71) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story