மாவட்ட செய்திகள்

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி + "||" + temple fest

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வெளிப்பாளையம்:-

நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சொர்க்கவாசல் திறப்பு

நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 19-வது தலமாகும். இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 11 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதன் பகல் பத்து உற்சவத்தையொட்டி தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் மோகினி அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. 
தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் எனும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அப்போது சவுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசலில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று கோஷம் எழுப்பி பெருமாளை பின்தொடர்ந்து, சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து சாமி தரிசனம் செய்தனர். 

அனந்தநாராயண பெருமாள்

இதேபோல் நவநீத கிருஷ்ணன் கோவில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோவில், ஆபரணதாரி அனந்த நாராயண பெருமாள், பாப்பாக்கோவில் கஸ்தூரி ரங்கநாத பெருமாள், நாகூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருக்கண்ணங்குடி லோகநாத பெருமாள் உள்ளிட்ட கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

வேதாரண்யம்

வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் வேதநாராயண பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் ஏகாதசி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் அலுவலர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

திருக்கண்ணபுரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரிராஜ பெருமாள் கோவில், ஆழ்வார்களால் பாடல்பெற்ற 108 வைணவ தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 3-ந் தேதி முதல் பகல் பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. இதில் தினமும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பிரகார வலம் வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருள, அவரை தொடர்ந்து பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தனர். 

வாய்மேடு

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியில் உள்ள ராமசாமி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல தலைஞாயிறு அருகே ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.