மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு:சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயம் + "||" + 44 injured in raging bulls

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு:சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு:சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர்.
கந்தர்வகோட்டை:
கொரோனா கட்டுப்பாடுகளுடன்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
ஜல்லிக்கட்டு 
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தாமதமாக நேற்று நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி தச்சன்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய வீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. 
முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலை வகித்தார். வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு 4 குழுக்களாக பிரிந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 580 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
44 பேர் காயம்
காளைகள் முட்டியதில் புதுக்கோட்டை மாவட்டம், சவேரியார் பட்டியை சேர்ந்த ஆப்பில் ராஜ் (வயது 26), மண்டையூரை சேர்ந்த சதீஸ்குமார் (21), அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (23), தஞ்சை மாவட்டம், மருதகுடியை சேர்ந்த சக்தி (23), செபஸ்தியார்பட்டியை சேர்ந்த அறிவு (24) உள்பட 44 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 5 பேரில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும், 2 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 
பரிசு பொருட்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு விழாக்குழுவினரால் தங்க நாணயங்கள், கட்டில், மிக்சி, கிரைண்டர் சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. 
ஜல்லிக்கட்டை தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, சின்னதுரை, மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின், புதுக்கோட்டை கோட்டாட்சியர் அபிநயா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சம்பத், வட்டாட்சியர் புவியரசன் மற்றும் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் தச்சன்குறிச்சி பொதுமக்கள் செய்திருந்தனர். 
ஜல்லிக்கட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் தலைமையில், இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்ற நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து தச்சன்குறிச்சியில் நடக்கும் ஜல்லிக்கட்டு தமிழகத்திலேயே நடக்கும் முதல் ஜல்லிக்கட்டும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் முதல் ஜல்லிக்கட்டும் ஆகும்.
கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்களுக்கு அனுமதி
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி வாடி வாசலுக்கு சென்ற வீரர்களிடம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்
ஜல்லிக்கட்டை காண்பதற்கு 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்தது. ஆனால் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 பேர் காயம்
திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 பேர் காயம் அடைந்தனர்.
2. திருமயம் அருகே குலமங்கலம் ஜல்லிக்கட்டில் ஆர்ப்பரித்த காளைகள் 23 பேர் காயம்
திருமயம் அருகே குலமங்கலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஆர்ப்பரித்த காளைகள் முட்டியதில் 23 பேர் காயமடைந்தனர்.
3. தெற்கு குடியிருப்பு கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு 3 வீரர்கள் காயம்
தெற்கு குடியிருப்பு கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
4. கே.ராயபுரத்தில் மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் 20 பேர் காயம்
கே.ராயபுரத்தில் நடை பெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20 பேர் காயமடைந்தனர்.
5. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு: ஆலங்குடி வன்னியன் விடுதியில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்; 66 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது ஜல்லிக்கட்டு ஆலங்குடி வன்னியன் விடுதியில் நடந்தது. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் 66 பேர் காயமடைந்தனர்.