மாவட்ட செய்திகள்

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + Heaven's Gate Opening at Perumal Temples

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்குடி, 

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி விழா

வருடந்தோறும் மார்கழி மாதம் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் அதிகாலையில் பெருமாள் கோவில்களில் உள்ள பரமபதம் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்தாண்டு நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் 

திருப்பத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி பகல் பத்து உற்சவம் நடந்தது. நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி. காலை 9 மணிக்கு பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி சயனத்திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இரவு 8 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுமியநாராயண பெருமாள் திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் திருப்பத்தூர் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவிலில் நேற்று காலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியக்குடி 

இதை போல காரைக்குடி அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பின்னர் காலை 5.15 மணிக்கு மூல ஸ்தானத்தில் இருந்து முத்தங்கியில் புறப்பட்டு காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. அதன் பின்னர் நம்மாழ்வார் மரியாதைகள் நடைபெற்று காலை 6.30 மணி முதல் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏகாதசி மண்டபத்தில் காட்சியளித்தார். 
தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளுக்குட்பட்டு நேற்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தனலெட்சுமி மற்றும் பரம்பரை அறங்காவலர் சேவு.அழகிய வனப்ப செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர். 
கோவிந்தா, கோவிந்தா கோஷம்
இதேபோல் தேவகோட்டை ரெங்நாதபெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. அதன் பின்னர்  சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரெங்கநாதபெருமாள், உபய நாச்சிமார்களுடன் கருடன் வாகனத்தில் எழுந்தருளினார். இதையொட்டி தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதலின் படி ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து தரிசனம் செய்தனர். 
 இதேபோல் சிவகங்கையில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5.28 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா நோய் தொற்று காரணமாக 50 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வரும்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டனர். 
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையினர், கொல்லங்குடி கோவில் செயல் அலுவலர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் காலை 6.30 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

வீரஅழகர் கோவில்

மானாமதுரையில் உள்ள சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தானத்திற்குட்ட வீரஅழகர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுந்தரராஜபெருமாளுக்கு 11 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்று சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சர்வ அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். அதன் பின்னர் தாயார் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி காட்சியளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபிமாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.