பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 7:14 PM GMT (Updated: 13 Jan 2022 7:14 PM GMT)

கரூரில் நேற்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கரூர், 
அபயபிரதான ரெங்கநாத சுவாமி
கரூர் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி கடந்த 3-ந் தேதி பகல்பத்து உற்சவ நிகழ்ச்சி தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து தினமும் சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாதர் அருள் பாலித்தார். நேற்றுமுன்தினம் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சொர்க்கவாசல் திறப்பு
இந்தநிலையில் நேற்று சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. காலை 5 மணியளவில் சொர்க்கவாசலை நோக்கி பல்லக்கில் ரெங்கநாதர் வந்தார். அப்போது சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டதும் அவர் அதனை கடந்து சென்றார். தொடர்ந்து கோவிலை வலம் வந்து, வாகன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சொர்க்கவாசல் திறக்கும் போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காலை 7 மணியளவில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் தரிசனம்
இதேபோல் கரூர் ஜவகர்பஜாரில் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான பண்டரிநாதன் சுவாமி பஜனை மடத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல்பத்து உற்சவ நிகழ்ச்சி கடந்த 3-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு பண்டரிநாதன் அருள்பாலித்தார். 
நேற்று காலை 5 மணியளவில் சொர்க்கவாசலை பண்டரிநாதன் கடந்து வந்தார். பின்னர் பண்டரிநாதன் வீதியுலா வந்தார். மீண்டும் மண்டபத்தில் எழுந்தருளிய பண்டரிநாதனுக்கு துளசியை படைத்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு, சொர்க்கவாசலை கடந்து சென்றனர்.
நீலமேகப்பெருமாள்
குளித்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற நீலமேகப்பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் முத்தங்கிசேவை அலங்காரம் செய்யப்பட்டன. அதுபோல் இந்த கோவிலிலுள்ள அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
காலை 5 மணியளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. முதலில் உற்சவ பெருமாள் பரமபத வாசல் வழியாக சென்ற பின்னர், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். பக்தர்கள் வழிபட்டு செல்லும் வகையில் கோவிலின் உற்சவ பெருமாள் தனி மண்டபத்தில் வைக்கப்பட்டார். அரசு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
வரதராஜ பெருமாள்
புஞ்சை தோட்டக்குறிச்சி சேங்கல்மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகமும், அதனை தொடர்ந்து மலர்களாலும், துளசியாலும் மாலைகள் அணிவிக்கப்பட்டு அர்த்தஜாம பூஜை நடந்தது.
அதிகாலை 3 மணியளவில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 5 மணிக்கு வைகுந்த துவார பூஜை நடந்தது. பின்னர் 5.30 மணியளவில் பரமபத வாசலானா சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
பல்லாக்கில் வீதி உலா
பல்லாக்கில் அமர்ந்து பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்ததும் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பெருமாள் கோவிலை சுற்றி உலா வந்தார். அதன் பின் தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 
இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் முகவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

Next Story