தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது -சபாநாயகர் அப்பாவு தகவல்


தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது -சபாநாயகர் அப்பாவு தகவல்
x
தினத்தந்தி 13 Jan 2022 7:56 PM GMT (Updated: 13 Jan 2022 7:56 PM GMT)

தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கையால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை சபாநாயகர் அப்பாவு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவியது. தினமும் 40 ஆயிரம் பேர் வீதம் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அப்போது முதல்- அமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு சிறப்பாக தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டதால், 2-வது அலையை எளிதாக கடந்து வந்துள்ளோம். தற்போது 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் 85 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி விட்டனர். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. எனினும் தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்க 3 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன. அதுபோன்று பகுப்பாய்வு மையமும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே உள்ள பள்ளியில் தொடங்கப்பட்டு உள்ளது. அங்கு நோய் தொற்றுடன் வருகிறவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, நோயின் தீவிரத்திற்கு ஏற்ப சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தற்போது ஆக்சிஜனும் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. 3-வது அலை வேகமாக பரவி வந்தாலும், தமிழக அரசு எடுத்து வருகின்ற தீவிர தடுப்பு நடவடிக்கையால் நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழை பெண்களின் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். அதன்படி 2,203 பெண்களுக்கு 17.62 கிலோ கிராம் தங்க நாணயத்துடன் ரூ.8 கோடியே 44 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. தொடர்ந்து பள்ளிக்கல்வி துறை சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.13¾ லட்சத்தில் 354 உபகரணங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட சமூக நல அலுவலர் சரசுவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story