குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் 2 நாட்கள் தடை


குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் 2 நாட்கள் தடை
x
தினத்தந்தி 13 Jan 2022 7:58 PM GMT (Updated: 13 Jan 2022 7:58 PM GMT)

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி:

பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். ஆனால் தற்போது கொரோனா, ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்து வந்தது.
இதன் எதிரொலியாக தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் இன்றுமுதல் 2 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா, ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதன் பொருட்டு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் சுற்றுலா தலங்களில் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியர் அருவி
இதேபோல் நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக எல்லைக்கு உட்பட்ட சுற்றுலா தலமான பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி மற்றும் அதைசார்ந்த சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, பராமரிப்பு பணி காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story