மாவட்ட செய்திகள்

பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா + "||" + Vaikunda Ekadasi festival at the Perumal temples

பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா

பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா
பெருமாள் கோவில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது
சமயபுரம்
திருச்சி மாவட்டம் குணசீலத்தில் புகழ்பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலில் மனநலம் குன்றியவர்கள் 48 நாட்கள் தங்கியிருந்து பெருமாளை வணங்கினால் நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். 
இவ்வாறு பல்வேறு சிறப்புமிக்க இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படிஇந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி மாலை 6 மணிக்கு மேல் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி அய்யங்கார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கே.கே.நகர் சீனிவாச பெருமாள்
 இதேபோல திருச்சி கே.கே.நகர், இந்திரா நகரில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று காலை 5-30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணி அளவில் மூலஸ்தானத்தில் இருந்து சீனிவாச பெருமாள் புறப்பட்டு கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து சொர்க்கவாசல் வழியாக அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து 6-30 மணி முதல் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. சொர்க்கவாசல் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டு இருந்தது.
முசிறி நாராயண பெருமாள்
முசிறி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் கிளி மாலையுடன், கருட வாகனத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மற்றும் பட்டாட்சியார்கள் செய்திருந்தனர்.