கரும்பு-மஞ்சள் கொத்து விற்பனை மும்முரம்


கரும்பு-மஞ்சள் கொத்து விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 13 Jan 2022 8:33 PM GMT (Updated: 13 Jan 2022 8:33 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு-மஞ்சள் கொத்து விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது.

தஞ்சாவூர்:
பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு-மஞ்சள் கொத்து விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் மக்கள் புத்தாடை அணிந்து புத்தரிசியில் பொங்கலிட்டு இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும் படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.
தஞ்சை மாநகரில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக மக்கள், பொங்கல் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதன்ஒரு பகுதியாக தஞ்சை கீழவாசல், அண்ணாசாலை, வடக்குவீதி, அய்யங்கடைதெரு, கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் கரும்பு, மஞ்சள், பூ, பழம் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
மண்பானை
பொங்கல் வைப்பதற்காக மண்பானைகளையும், மண் அடுப்புகளையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 1 ஜோடி சிறிய பானை ரூ.110-க்கும், பெரிய பானை ரூ.200 வரையும், மண் அடுப்பு ரூ.110-க்கும் விற்பனையானது. மஞ்சள் கொத்து 1 ஜோடி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலையில் 1 ஜோடி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது.
தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. பொங்கல் பண்டிகை என்பதால் பூக்கள் வாங்குவதற்காக நேற்று காலையிலிருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தேவை அதிகமாக இருந்ததால் பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது.
மல்லிகைப்பூ
நேற்று முன்தினம் கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மல்லிகைபூ நேற்று கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது. ரூ.1500-க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. வாழைத்தார் ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. தஞ்சை காவேரிநகரில் உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்குவதற்காக மக்கள் அதிகஅளவில் வந்து இருந்தனர்.
கரும்பு
அதேபோல் திலகர் திடல் பகுதியில் உள்ள மாலைநேர காய்கறி அங்காடியிலும் மக்கள் அதிகஅளவில் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். தஞ்சை சிவகங்கை பூங்கா, வடக்குவீதி, மேலவீதி, கீழவீதி, ராஜப்பாநகர், முனிசிபல்காலனி, பாலாஜிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தனர். 10 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் கரும்புகள், காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இதனால் பொங்கலையொட்டி இறுதிக்கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பல இடங்களில் காய்கறிகள், கரும்புகள் விற்பனை செய்யப்பட்டதால் சந்தைகளில் கூட்டம் பரவலாகவே காணப்பட்டது.

Next Story