பொங்கலையொட்டி, அந்தியூர் பகுதியில் மாட்டு உருவ பொம்மை விற்பனை மும்முரம்


பொங்கலையொட்டி, அந்தியூர் பகுதியில் மாட்டு உருவ பொம்மை விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 13 Jan 2022 8:35 PM GMT (Updated: 13 Jan 2022 8:35 PM GMT)

மாட்டுப்பொங்கலையொட்டி அந்தியூர் பகுதியில் மாட்டு உருவ பொம்மை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்தியூர்
மாட்டுப்பொங்கலையொட்டி அந்தியூர் பகுதியில் மாட்டு உருவ பொம்மை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாட்டு உருவ பொம்மை 
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி ஆகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் இங்குள்ள விவசாயிகள் பொங்கலை விமரிசையாக கொண்டாடுவார்கள். குறிப்பாக மாட்டுப்பொங்கலையொட்டி தங்களுடைய மாடுகளை குளிப்பாட்டி, நெற்றியில் பொட்டு வைப்பர். பின்னர் மாட்டுக்கொட்டகையை சுத்தம் செய்து சர்க்கரை பொங்கல் வைத்து மாட்டுக்கு வழங்குவர். 
சில விவசாயிகள் தங்களுடைய தோட்டம் மற்றும் மாட்டுக்கொட்டகைகளில் மாட்டு உருவ பொம்மைகளை வைத்தும் பொங்கலை சிறப்பாக கொண்டாடுவது உண்டு. மேலும் கோவில்களில் வைக்கவும் இந்த மாட்டு உருவ பொம்மைகளை விவசாயிகள் வாங்கி செல்வதும் உண்டு. அப்போது மேளதாளங்கள் முழங்க கோவில்களுக்கு மாட்டு உருவ பொம்மைகளை விவசாயிகள் எடுத்து சென்று நேர்த்திக்கடனாக வைப்பர். அவ்வாறு கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்தினால் தங்களுடைய வீடுகளில் மாடுகள் அபிவிருத்தி ஆவதுடன், நோய் தாக்காமல் இருக்கும் என்பது விவசாயிகளின் ஐதீகமாக உள்ளது. 
ரூ.5 ஆயிரம்
இதையொட்டி அந்தியூர், புதுப்பாளையம், வேம்பத்தி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மண்ணால் ஆன மாட்டு உருவ பொம்மை தயாரிப்பு பணிகள் நடைபெற்று  வருகிறது. இதில் மாட்டு உருவ பொம்மைகள் அளவை பொறுத்து ரூ.300 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. அந்தியூர் பகுதியில் மாட்டு உருவ பொம்மை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் இங்கு வந்து மாட்டு உருவ பொம்மைகளை வாங்கி செல்கின்றனர்.

Next Story