சுற்றுலா தலங்களுக்கு 10 நாட்கள் செல்ல தடை கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு


சுற்றுலா தலங்களுக்கு 10 நாட்கள் செல்ல தடை கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 8:50 PM GMT (Updated: 13 Jan 2022 8:50 PM GMT)

குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அரவிந்து அறிவித்துள்ளார்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அரவிந்து அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இரவு நேர ஊரடங்கு-
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசின் ஆணைப்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தொடர் விடுமுறை தினங்களான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 18-ந் தேதி வரையிலும் மற்றும் வார இறுதி நாட்களான 21, 22, 23, 28, 29, 30-ந் தேதி ஆகிய நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதியில்லை.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணிகள், பூஜைகள் மற்றும் வழிபாடுகள் கோவில், தேவாலய பணியாளர்களால் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செய்ய வேண்டும். வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ளப்படும் தேரோட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் விடுமுறை அல்லாத நாட்களில் உதவி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் அனுமதி பெற்றும், இரண்டு தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்று மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்ற சான்று ஆகிய சான்றுகள் வைத்துள்ள 100 நபர்கள் மட்டும் அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விழாக்களை நடத்திக் கொள்ளலாம்.
சுற்றுலா தலங்கள்
மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், பூங்காக்கள், கன்னியாகுமரி சூழலியல் பூங்கா ஆகியவற்றிற்கு தொடர் விடுமுறை தினங்களான இன்று முதல் 18-ந் தேதி வரையிலும், வார விடுமுறை நாட்களான 22, 23, 26 (குடியரசு தினம்), 29 மற்றும் 30- ந் தேதி ஆகிய 10 நாட்கள் பொதுமக்கள் செல்ல அனுமதியில்லை. கன்னியாகுமரியில் படகு சேவையும் ரத்து செய்யப்படுகிறது. பிறநாட்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் மறு உத்தரவு வரும் வரை அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story