கர்நாடக மந்திரி, எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கு கொரோனா; காங். பாதயாத்திரையில் பங்கேற்றவர்களுக்கும் பாதிப்பு


கர்நாடக மந்திரி, எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கு கொரோனா; காங். பாதயாத்திரையில் பங்கேற்றவர்களுக்கும் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 8:54 PM GMT (Updated: 13 Jan 2022 8:54 PM GMT)

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். நேற்று மந்திரி, எம்.எல்.ஏ., எம்.எல்.சி. ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். காங்கிரசின் பாதயாத்திரையில் பங்கேற்றவர்களும் பாதிக்கப்பட்டு வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். நேற்று மந்திரி, எம்.எல்.ஏ., எம்.எல்.சி. ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். காங்கிரசின் பாதயாத்திரையில் பங்கேற்றவர்களும் பாதிக்கப்பட்டு வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

மந்திரி நாராயணகவுடா

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை வேகமெடுத்துள்ள நிலையில் மக்கள் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை, மந்திரி ஆர்.அசோக், சில எம்.எல்.ஏ.க்களும் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான சிவராஜ்பட்டீலலுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர் பயாப்புராவில் உள்ள வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 அதுபோல் ராய்ச்சூர் பயாப்புராவை சேர்ந்தவர் சரணகவுடா பயாப்புரா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கர்நாடக மேல்-சபை உறுப்பினராகவும் உள்ளார்.இந்த நிலையில் இவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டு தனிமையில் உள்ளார். 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் நாராயண கவுடா. இவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் டாக்டரின் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி நாராயணகவுடா கேட்டு கொண்டு உள்ளார்.

பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள்

இதேபோல், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த 9-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதயாத்திரையை முரசு கொட்டி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும்போது முகக்கவசம் இல்லாமல் பேசினார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அங்கு அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 4 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாதயாத்திரையில் கலந்து கொண்ட இன்னொரு முக்கிய தலைவரான முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். 

ஏற்கனவே பாதயாத்திரையில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் அஜய்சிங், சிவசங்கர ரெட்டி, முன்னாள் மந்திரி எச்.எம்.ரேவண்ணா, சி.எம்.இப்ராகிம் எம்.எல்.சி. மற்றும் பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த ராமநகர் உதவி கலெக்டர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story