ஜாமீன் கிடைத்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கைதி திடீர் சாவு கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலைமறியல்


ஜாமீன் கிடைத்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கைதி திடீர் சாவு கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 13 Jan 2022 9:03 PM GMT (Updated: 13 Jan 2022 9:03 PM GMT)

ஜாமீன் கிடைத்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கைதி திடீரென இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம், 
சிகிச்சை பலனின்றி சாவு
சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி அம்சலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரன், அம்சலா ஆகிய 2 பேரையும் ஒரு திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர். இதில் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரனுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.
சாலை மறியல்
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரபாகரன் இறந்தது குறித்து தகவல் கிடைத்ததும் நேற்று காலை அவருடைய உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் பிரபாகரனின் உடலை வாங்க மறுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதைதொடர்ந்து பிரபாகரன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், நாகராஜன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கை
அப்போது போலீசாரிடம், பிரபாகரன் இறந்தது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என்றும், கைதான பிரபாகரனின் மனைவியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story