மாவட்ட செய்திகள்

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + krisnakiri kovil

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி, ஜன.14-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
சொர்க்கவாசல் திறப்பு 
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ‘பரமபத வாசல்’ என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள நவநீத வேணுகோபால சாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் நவநீத வேணுகோபால சாமி சொர்க்க வாசல் வழியாக வந்தார். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நவநீத வேணுகோபால சாமி கோவிலைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் 
இதேபோல் கிருஷ்ணகிரியை அடுத்த பொன்மலை சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், மகா தீபாரதனையும், 5 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேணுகோபால சாமி கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயண சாமி கோவில், நரசிம்ம சுவாமி கோவில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவில், கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், போச்சம்பள்ளி அடுத்த சென்றாயமலை சென்றாய பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.
ஓசூர்
ஓசூர் அருகே கோபசந்திரம் ஸ்ரீவெங்கடேஸ்வரசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. தினமும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. கடைசி நாளான நேற்று, சாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அங்கிருந்த திரளான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்கள் எழுப்பினர். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
10 ஆயிரம் லட்டுகள்
தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் லட்டுகள் மற்றும் சாத்துக்குடி, வாழைப்பழங்கள் சாமிக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஓசூர் வெங்கடேஷ்நகர், அலசநத்தம், குடிசெட்லு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
இதே போல மாவட்டம் முழுவதும் பெருமாள் கோவில்களில் சொர்க் கவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.