பொங்கல் பண்டிகை களை கட்டியது


பொங்கல் பண்டிகை களை கட்டியது
x
தினத்தந்தி 13 Jan 2022 9:04 PM GMT (Updated: 13 Jan 2022 9:04 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை களை கட்டியது. மண்பானை, கரும்பு விற்பனை அமோகமாக நடந்தது.

கிருஷ்ணகிரி, ஜன.14-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை களை கட்டியது. மண்பானை, கரும்பு விற்பனை அமோகமாக நடந்தது.
பொங்கல் பண்டிகை 
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோராக நேற்று நடந்தது.
மஞ்சள் குலை, கரும்பு, பூஜை பொருட்கள், தேங்காய், காய்கறிகள், பொங்கல் பானைகள், பனங்கிழங்கு, அடுப்புகள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அதேபோல வண்ண கோலப்பொடிகள், சாமந்தி பூக்கள் அடங்கிய மாலைகள், பூக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
அலைமோதிய மக்கள்
இதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர். இதனால் கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு ரவுண்டானா, சேலம் சாலை, பெங்களூரு, சென்னை சாலைகள், உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கிருஷ்ணகிரி நகரில் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால் கிருஷ்ணகிரி பஸ நிலையத்தில் பயணிகள் கூட்டமாக காணப்பட்டது. மேலும் பெங்களூரு, ஓசூரில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. 
பூக்கள் விலை
ஓசூர் மலர் சந்தையில் பூக்களின் விற்பனை களை கட்டியது. வழக்கமாக விற்பனை ஆகும் விலையை விட நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.
அதாவது ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,600-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், அரளி ரூ.300-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், சாமந்தி ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனை ஆனது. 

Related Tags :
Next Story