மாவட்ட செய்திகள்

உழவர் சந்தைகளில் ஒரே நாளில் ரூ.38 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை + "||" + Vegetables sold at farmers markets for Rs 38 lakh in a single day

உழவர் சந்தைகளில் ஒரே நாளில் ரூ.38 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

உழவர் சந்தைகளில் ஒரே நாளில் ரூ.38 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி உழவர் சந்தைகளில் ஒரே நாளில் ரூ.38 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை ஆனது.
நெல்லை:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கு தேவையான பொருட்களை கடந்த 1 வாரகாலமாக பொதுமக்கள் வாங்கி வருகிறார்கள். பொங்கலிட்டு வழிபடுவதோடு, அனைத்து வகை காய்கறிகளையும் போட்டு சமையல் செய்து படைத்து சாப்பிடுவதும் வழக்கம். இதற்காக நெல்லையில் பாளையங்கோட்டை காய்கறி மார்க்கெட், நயினார்குளம் மார்க்கெட், டவுன் தற்காலிக மார்க்கெட் கடைகளில் காய்கறிகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளிலும் காய்கறிகள் விற்பனை சூடுபிடித்தது. பிற மார்க்கெட்டுகள், சில்லறை விற்பனை கடைகளை விட உழவர் சந்தைகளில் காய்கறிகள் விலை குறைவாக இருந்தது. இதனால் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 உழவர் சந்தைகளிலும் நேற்று ஒரே நாளில் 100 டன் காய்கறிகள் விற்று சாதனை படைத்துள்ளது. இதில் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் மட்டும் ரூ.30 லட்சம் மதிப்பிலான 78 டன் காய்கறிகள் விற்று தீர்ந்தன. இதுதவிர மேலப்பாளையம், டவுன் கண்டியப்பேரி மற்றும் அம்பை உழவர் சந்தைகளில் ரூ.8 லட்சம் வரை (22 டன் காய்கறிகள்) விற்பனை ஆனது.

நெல்லை பாளையங்கோட்டை உழவர் சந்தையில் நேற்றைய காய்கறிகள் விலை விவரம் (1 கிலோவுக்கு) வருமாறு:-
தக்காளி -ரூ.36, கத்தரி (வெள்ளை) -56, வெண்டை-36, புடலை-16, சுரைக்காய் -10, பீர்க்கங்காய் -30, பூசணி -30, தடியங்காய்-18, அவரை -60, பாகற்காய்-30, மிளகாய் -60, பல்லாரி -40, உள்ளி -62, காராமணி-25, தேங்காய்-34, இஞ்சி-25, மாங்காய்-80, பீன்ஸ்-60, முள்ளங்கி-30, உருளைக்கிழங்கு- 24, கேரட்-85, சவ்சவ்-20, முட்டைகோஸ்-50, பீட்ரூட்-70, பூண்டு-70, கருணை-24, சேம்பு-35, சேனை-20,சிறுகிழங்கு-50.