செல்போன் திருடிய வாலிபரை விரட்டி பிடித்த போலீஸ்காரர்


செல்போன் திருடிய வாலிபரை விரட்டி பிடித்த போலீஸ்காரர்
x
தினத்தந்தி 13 Jan 2022 9:27 PM GMT (Updated: 13 Jan 2022 9:27 PM GMT)

மங்களூருவில் சினிமா பாணியில் செல்போன், மணிபர்சை திருடிய வாலிபரை ஒரு கி.மீ. தூரம் விரட்டி சென்று போலீஸ்காரர் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு: மங்களூருவில் சினிமா பாணியில் செல்போன், மணிபர்சை திருடிய வாலிபரை ஒரு கி.மீ. தூரம் விரட்டி சென்று போலீஸ்காரர் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

செல்போன், மணிபர்ஸ் திருட்டு

தட்சிண கன்னடா மங்களூரு தெற்கு போலீஸ் நிலையில் போலீஸ்காரராக வருண் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று போலீஸ்காரர் வருண், காரில் நேரு மைதானம் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அப்பகுதியில் ஒரு இடத்தில் தூங்கி கொண்டிருந்த ஒரு நபரின் செல்போன், மணிபர்சை 3 வாலிபர்கள் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பி சென்றனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர் கத்தி கூச்சலிட்டார்.  

விரட்டி பிடித்த போலீஸ்காரர்

இதனை காரில் சென்றவாறு போலீஸ்காரர் வருண் பார்த்துள்ளார். இதையடுத்து அவர், வாலிபர்கள் தப்பி சென்ற ஆட்டோவை காரில் விரட்டி சென்றார். பின்னால் கார் வருவதை பார்த்து 3 வாலிபர்களும் ஆட்டோவில் வேகமாக சென்றனர். ஆனாலும் விடாமல் போலீஸ்காரர் வருண் காரில் ஆட்டோவை துரத்தினார். அதன்படி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டி சென்று டோக்கியோ பஜார் எனும் இடத்தில் ஆட்டோவின் குறுக்கே காரை நிறுத்தி மறித்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த 3 வாலிபர்களும், ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி தப்பியோடினர். இதையடுத்து போலீஸ்காரர் வருண் கீழே இறங்கி அவர்களை விரட்டி ஓடினார். அவர்களில் ஒருவரை வருண் மடக்கி பிடித்தார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். வருண் பிடியில் இருந்து அந்த நபரும் தப்ப முயன்றார். ஆனாலும் அந்த நபருடன் கட்டிப்பிடித்து கீழே உருண்டு அவரை கெட்டியாக பிடித்து கொண்டார். 

2 பேர் கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர், நீர்மார்க்கம் பகுதியை சேர்ந்த ஹரீஷ் பூஜாரி(வயது 32) என்பதும், தப்பி ஓடியவர்கள் சுமந்த்(20), ராஜேஷ் என்பதும் தெரியவந்தது, மேலும் அவர்கள் 3 பேரும் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கைதான ஹரீஷ் பூஜாரி கொடுத்த தகவலின்பேரில் சுமந்தை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள். 

போலீஸ் கமிஷனர் பாராட்டு

அவர்களிடம் இருந்து செல்போன், மணிபர்சை பறிமுதல் செய்து அதன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

செல்போன், மணிபர்சை திருடிய வாலிபரை சினிமா பாணியில் விரட்டி சென்று போலீஸ்காரர் விரட்டி பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே திருடனை பிடித்த போலீஸ்காரர் வருணை மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார், பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story