மாவட்ட செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா + "||" + Thiruvodal Festival at Arunachaleshwarar Temple

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடந்தது.
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடந்தது. 

திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை தாமரைக் குளத்தின் கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 

அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்திருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

அதைத்தொடர்ந்து கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 

இந்த நிகழ்ச்சிக்கு வரலாற்று கதை கூறப்படுகிறது. அதாவது பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார்.

 இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

சிறப்பு அலங்காரம்

தை மாதம் 2-ந் தேதி நடக்கும் இந்த திருவிழா இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. 

மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், கனிகளால் அலங்காரம் செய்யட்டு, பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

தொடர்ந்து சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர். 

வழக்கமாக இரவு 7 மணியளவில் நடைபெறும் திருவூடல் நிகழ்ச்சி இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இதற்காக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 

நிகழ்ச்சியையொட்டி அப்பகுதியை சுற்றி உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார்.

அருணாசலேஸ்வரர் கிரிவலம்

அங்கிருந்து அருணாசலேஸ்வரர் பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று கிரிவலம் சென்றார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வந்த அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் அருகிலுள்ள முருகர் சன்னதியில் எழுந்தருளினார்.

தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) சாமி சன்னதியில் மறுவூடல் நடைபெறவுள்ளது.