ரூ10 கோடிக்கு மது விற்பனை


ரூ10 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 15 Jan 2022 3:32 PM GMT (Updated: 15 Jan 2022 3:32 PM GMT)

ரூ10 கோடிக்கு மது விற்பனை

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையன்று ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்தது. மதுப்பிரியர்கள் பெட்டி பெட்டியாக மது வகைகளை அள்ளி சென்றனர். 
மொத்தமாக வாங்கி சென்றனர்
பின்னலாடைக்கு பெயர் பெற்ற திருப்பூரில் வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில தொழிலாளர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் டாஸ்மாக் மது விற்பனை மாவட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் பண்டிகை கொண்டாட்ட காலங்களில் மது விற்பனை எகிறும்.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையொட்டி தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர். இதுதவிர திருப்பூர் வாசிகள் விடுமுறை தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். மதுப்பிரியர்களும் மதுவுடன் கொண்டாடினார்கள். நேற்று திருவள்ளுவர் தினம், இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மதுவிற்பனை அதிகமாக இருந்தது. தொடர் விடுமுறை என்பதால் மதுப்பிரியர்கள் தாங்கள் விரும்பிய மது வகைகளை பெட்டி பெட்டியாக வாங்கி வைத்து குடித்து மகிழ்ந்தனர்.
ரூ.10 கோடிக்கு மது விற்பனை
குறிப்பாக இளைஞர்கள் தண்ணீர் பாய்ந்து செல்லும் வாய்க்கால்கள், நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்கு படையெடுத்து சென்று குளித்து மகிழ்ந்தும், மது அருந்தியும், அசைவம் சமைத்து சாப்பிட்டும் பொழுதை கழித்தனர். மாவட்டத்தில் 258 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு நாளொன்றுக்கு சராசரியாக ரூ.6½ கோடிக்கு மது விற்பனை நடப்பது வழக்கம். 
நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையன்று டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். அவர்கள் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story