களை இழந்த காணும் பொங்கல் பண்டிகை


களை இழந்த காணும் பொங்கல் பண்டிகை
x
தினத்தந்தி 15 Jan 2022 4:08 PM GMT (Updated: 15 Jan 2022 4:08 PM GMT)

சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால், நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்

தூத்துக்குடி:
சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால், நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
காணும் பொங்கல் 
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். அதுபோலவே பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் காணும் பொங்கல் பண்டிகையையும் மிகவும் உற்சாக கொண்டாடுவர். 
காணும் பொங்கல் அன்று தூத்துக்குடியில் முயல்தீவு, துறைமுக கடற்கரை, முத்துநகர் கடற்கரை, ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, டூவிபுரம் பூங்கா, மில்லர்புரம் பூங்கா, தெற்கு பீச்ரோடு தூண்டில்வளைவுபாலம், திருச்செந்தூர் கடற்கரை, மணப்பாடு, குலசேகரபட்டினம் கடற்கரை, அம்மன்புரம் அருகே அருஞ்சுனைகாத்த அய்யனார் கோவில்சுனை, முறப்பநாடு, மருதூர் அணைக்கட்டு, வல்லநாடு நீர்த்தேக்கம், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய நினைவு கட்டபொம்மன் கோட்டை, கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் பொதுமக்கள் செல்வது வழக்கம்.
அன்றைய தினம் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனும் கடற்கரைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு காலை முதலே சென்று நள்ளிரவு வரை மகிழ்ச்சியாக பொழுதை போக்குவது வழக்கம்.
இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காங்கள், பொழுது போக்கு இடங்கள் அனைத்தும் களை கட்டி இருக்கும். தற்காலிக கடைகள் அமைத்து  சிறு வியாபாரிகளும், சாலையோர வியாபாரிகளும் விதவிதமான உணவு பண்டங்களை விற்பனை செய்வர்.
அரசு அறிவுறுத்தல்
கடந்த ஆண்டு பருவம் தவறிய கனமழை காரணமாக  பொங்கல் பண்டிகை மற்றும் காணும்பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். 
இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், நேற்று காணும் பொங்கல் பண்டிகையை வீடுகளில் மட்டும் கொண்டாட பொதுமக்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. 
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
1,500 போலீசார் குவிப்பு
போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாத்தலங்களுக்கு நேற்று கார்கள், ஆட்டோக்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வீடுகளிலேயே முடங்கினர். இதை தொடர்ந்து கடற்கரை, சுற்றுலா தலங்கள், கோவில் வளாகங்கள் வெறிச்சோடி கிடந்தன. உற்சாகத்துடன் கொண்டாடப்படும் காணும் பொங்கல் பண்டிகை களையிழந்து போனது.
வெறிச்சோடிய மணப்பாடு
சிறந்த சுற்றுலாத்தலமாகவும், ஏழைகளின் கோவா என்றழைக்கப்படும் மணப்பாடு நீண்ட கடற்பரப்பை கொண்டது. இங்கு மிகப்பழமையான தேவாலயம், புனித சவேரியார் தங்கிய குகை, மணற்குன்று, பழமையான கட்டங்கள் என ஏராளமானவைகள் உள்ளன. இப்பகுதிக்கு காணும் பொங்கலை கொண்டாட நேற்று கார், வேன்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்தனர். ஆனால், அதிகாலை முதலே மணப்பாடு எல்கையில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியான்டி மற்றும் போலீசார் சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகளை போலீசார்  தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.  கடற்கரை பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் மணப்பாடு கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story