பாலமேடு, அவனியாபுரத்தில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு


பாலமேடு, அவனியாபுரத்தில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு
x
தினத்தந்தி 15 Jan 2022 7:07 PM GMT (Updated: 15 Jan 2022 7:07 PM GMT)

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களை சிதறடித்தன.

மதுரை, 

அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களை சிதறடித்தன. 

ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், தை மாதம் 3-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும். 
இந்த ஆண்டு கொரோனா அதிக அளவில் பரவி வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்தது. 

பாலமேடு

இதன்தொடர்ச்சியாக பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதையொட்டி ஜல்லிக்கட்டு திடலில் 200 அடி தூரத்திற்கு தேங்காய் நார் பரப்பப்பட்டது. பார்வையாளர்கள் பகுதிக்குள் காளைகள் சென்று விடாதபடி கம்பியால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 
போட்டியில் கலந்துகொள்ள 300 வீரர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டு இருந்தது. மாடுபிடி வீரர்களுக்கு களத்தில் இறங்குவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு நீலம், பச்சை, மஞ்சள் உள்ளிட்ட பல நிறங்களில் சீருடைகள் வழங்கப்பட்டு திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
காலை சரியாக 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

உறுதிமொழி ஏற்பு

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், விதிமுறைகளை வாசித்தார். அதன்படி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு, மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மதுரை மாவட்ட சூப்பிரண்டு பாஸ்கரன், வெங்கடேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்  வெங்கடேசன், புதூர் பூமிநாதன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாலமேடு கிராம கமிட்டி சார்பில் மகாலிங்கசுவாமி கோவிலில் வழிபாடு நடைபெற்று, முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறி வந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பிடித்தனர்.

திமிறிய காளைகள்

பல காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்தன. வீரர்களை பந்தாடின. புரட்டியெடுக்கவும் செய்தன. விசுவரூப பாய்ச்சலில் வந்த காளைகளிடம் இருந்து பின்வாங்கி, வீரர்கள் பம்மிய காட்சிகளையும் காண முடிந்தது. 
அதே போல் காளைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் என்று பல காளையர்களும் தங்கள் திறமைகளை காட்டி பார்வையாளர்களிடம் பல முறை சபாஷ் பெற்றனர். திமிறினாலும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி அசத்தினர். 
அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும், அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், செல்போன், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள், பட்டு சேலைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில், மெத்தை, டி.வி., கிரைண்டர், மிக்சி, அண்டா, பாத்திரங்கள் போன்ற சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். வாலை பிடிக்கக் கூடாது, 15 மீட்டர் தூரத்திற்குள் காளைகளை பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை விழாக்குழுவினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து கொண்டே இருந்தனர். விதிகளை மீறிய மாடுபிடி வீரர்கள் உடனடியாக திடலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மாலை 5 மணி வரை பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்தது. 704 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 
21 காளைகளை அடக்கி மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் முதல் இடம் பிடித்தார். அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா பிடித்தார். அவருக்கு எல்.இ.டி. டி.வி. பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளையாக சிவகங்கையை சேர்ந்த சூறாவளி காளை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசாக மதுரை மேலமடையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காளைக்கு பசுவும், கன்றும் வழங்கப்பட்டது. 

36 பேர் காயம்

இதுபோல் காளைகள் முட்டியதில் 2 போலீஸ்காரர்கள், பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் என 36 பேர் காயம் அடைந்தனர். அதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவில் 6 மாவட்டங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவனியாபுரம்

பொங்கல் தினமான நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இதனை அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன.
ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்றது. இருந்தாலும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் காயம் அடைந்தனர்.

மாடு முட்டி வாலிபர் பலி

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த குட்டீஸ் என்பவர் மகன் பாலமுருகன் (வயது 18). இவர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்திருந்தார். வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த ஒரு மாடு, பார்வையாளராக நின்றிருந்த பாலமுருகன் மீது எதிர்பாராதவிதமாக மார்பில் முட்டியதில் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ேபாராடிய அவரை, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மாடு முட்டியதில்  80 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த 21 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை பெற்றார்கள்.

வீரர்களுக்கு பரிசுகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
19 காளைகளை அடக்கிய வலையங்குளம் முருகனுக்கு 2-வது பரிசாக மோட்டார் சைக்கிளும், 11 காளைகளை அடக்கிய விளாங்குடியை சேர்ந்த பரத்குமாருக்கு 3-வது பரிசாக பசுவும், கன்றும் வழங்கப்பட்டது. சிறந்த காளையாக மணப்பாறையை சேர்ந்த தேவசகாயம் வளர்த்து வரும் காளை தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற வேண்டும். ஆனால், இன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

Next Story