பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு


பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 15 Jan 2022 7:19 PM GMT (Updated: 15 Jan 2022 7:19 PM GMT)

பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

சிவகங்கை,
சிவகங்கை அருகே பெண்கள் வெள்ளை சேலை கட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். பூஜை செய்த கரும்பு ரூ. 15 ஆயிரத்து 501-க்கு ஏலம் போனது.
பொங்கல்
சிவகங்கை அருகே மதகுபட்டி கீழத்தெரு, மேற்குத்தெரு, சலுகைபுரம் பகுதி மக்கள், தங்களது காவல் தெய்வங்களான பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாட்டுப்பொங்கல் அன்று பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு தவிர்த்து வெள்ளை சேலை அணிந்து கோவிலில் பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாக தொட்டில் கரும்பு கட்டினர். விழா முடிந்ததும் நேர்த்திக்கடனாக செலுத்தபட்ட கரும்புகள், விரதமிருந்து அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை ஆகியவை ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் கரும்பு, எலுமிச்சையை ஏலம் எடுத்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் அவற்றை போட்டி போட்டு கொண்டு பலரும் ஏலம் எடுத்தனர். இதில் ஒரு கரும்பு அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்து 501-க்கும், ஒரு எலுமிச்சை ரூ.4 ஆயிரத்து 1-க்கும் ஏலம் போனது.
விரதம்
இதுகுறித்து கூறிய அப்பகுதிமக்கள், ‘எங்கள் தெய்வங்களுக்கு முன்பு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி அனைவரும் சமம் என்பதற்காக அணிகலன்கள் அணியாமல் ஒரே மாதிரியாக உடையணிந்து பொங்கல் வைப்போம். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே விரதம் இருக்க தொடங்கி விடுவோம். ஏலம் எடுப்போருக்கு நினைத்த காரியம் நடப்பதால் ஆண்டுதோறும் ஏலத்தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது’ என்றனர்.

Next Story