ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் நடிகை கண்முன்னே 6 வயது மகள் சாவு


ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் நடிகை கண்முன்னே 6 வயது மகள் சாவு
x
தினத்தந்தி 15 Jan 2022 9:24 PM GMT (Updated: 2022-01-16T02:54:31+05:30)

பெங்களூருவில், ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் நடிகை கண்முன்னே 6 வயது மகள் இறந்த சம்பவம் நடந்து உள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில், ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் நடிகை கண்முன்னே 6 வயது மகள் இறந்த சம்பவம் நடந்து உள்ளது.

நடிகை மகள் சாவு

பெங்களூரு கனகபுரா ரோடு ரகுவனஹள்ளியில் வசித்து வருபவர் ரூபேஷ். இவரது மனைவி அம்ருதா. நடிகையான அம்ருதா தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரூபேஷ்-அம்ருதா தம்பதியின் மகள் சமன்வி(வயது 6). இந்த நிலையில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 13-ந் தேதி அம்ருதாவும், சமன்வியும் ஒரு ஸ்கூட்டரில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கோனகுண்டேபாளையா அருகே வஜ்ரஹள்ளி கிராஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது பின்னால் வந்த ஒரு லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமன்வி படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அம்ருதா கண்முன்னே பரிதாபமாக இறந்தாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்ருதா, சமன்வியின் உடலை பார்த்து கதறி அழுதார்.

டிரைவர் கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் குமாரசாமி லே-அவுட் போக்குவரத்து போலீசார் அங்கு சென்று சமன்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் மஞ்சேகவுடா(45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சாலையில் சென்று கொண்டு இருந்த ஆட்டோவை முந்திச்செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியதாக தெரிவித்து இருந்தார். விபத்துக்கு காரணமான லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான மஞ்சேகவுடா மீது குமாரசாமி லே-அவுட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story