கர்நாடகத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்வோருக்கு கட்டுப்பாடு


கர்நாடகத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்வோருக்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 15 Jan 2022 9:35 PM GMT (Updated: 15 Jan 2022 9:35 PM GMT)

கர்நாடகத்தில் நாள்தோறும் கொரோனா புதிய உச்சம் தொட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வோருக்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படுவோர் மட்டுமே ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் நாள்தோறும் கொரோனா புதிய உச்சம் தொட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வோருக்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படுவோர் மட்டுமே ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினசரி பாதிப்பு...

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.  கொரோனா முதல் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும், 2-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

 ஆயிரக்கணக்கானோர் 2-வது அலையில் தங்களது உயிரை கொரோனா வைரசுக்கு பறிகொடுத்தனர். தற்போது 2-வது அலையும் கட்டுக்குள் வந்த நிலையில், கொரோனா 3-வது அலை விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. 

கொரோனா முதல் மற்றும் 2-வது அலையைவிட 3-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 2 வாரத்திற்குள் மட்டும் கொரோனா 3-வது அலையால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

புதிய கட்டுப்பாடுகள்

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் கூடுவதை தடுக்க மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டு உள்ளது. 

அதன்படி கர்நாடகத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவக்கல்லூரிகள், பல்நோக்கு ஆஸ்பத்திரிகள் என அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் அடுத்த 2 வாரங்களுக்கு கடும் நோயால் அவதிப்படுபவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டுமே வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. 

சாதாரண ேநாய்களுக்கு...

சிறிய அளவிலான நோய், உடல் பிரச்சினைகள், சாதாரண காய்ச்சல் போன்ற நோய்கள், இணை நோய் உள்ளவர்கள், தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்கள், பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை தேவைப்படுபவர்கள் போன்றோர் ஆஸ்பத்திரிகளுக்கு நேரில் வர வேண்டாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. 

இந்த உத்தரவு அடுத்த 2 வாரங்களுக்கோ அல்லது அடுத்த அறிவிப்பு அறிவிக்கப்படும் வரையிலோ அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

அடுத்த அறிவிப்பு வரும் வரை

இதுதொடர்பாக மாநில அரசு சார்பில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் அனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவக்கல்லூரிகள், பல்நோக்கு ஆஸ்பத்திரிகளுக்கு அவசர சிகிச்சை மற்றும் கடும் நோயால் அவதிப்படுபவர்கள் மட்டுமே சிகிச்சைக்கு  வர வேண்டும். சாதாரண காய்ச்சல், இணை நோய் உள்ளவர்கள், தொடர் சிகிச்சை தேவைப்படுபவர்கள், பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை மற்றும் சிறிய அளவிலான நோய்கள், உடல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை தேவைப்படுபவர்கள் யாரும் நேரில் வர வேண்டாம். இந்த உத்தரவு அடுத்த 2 வாரங்களுக்கோ அல்லது அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரையோ அமலில் இருக்கும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தனியார் மருத்துவமனைகள் செய்து கொள்ள வேண்டும். 
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. 

32 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் 32 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 2 லட்சத்து 18 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 32 ஆயிரத்து 793 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூரு நகரில் 22 ஆயிரத்து 284 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 86 ஆயிரத்து 40 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 7 பேர் இறந்தனர். 38 ஆயிரத்து 418 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.

நேற்று 4 ஆயிரத்து 273 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 29 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1 லட்சத்து 69 ஆயிரத்து 850 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாகல்கோட்டையில் 106 பேர், பல்லாரியில் 410 பேர், பெலகாவியில் 393 பேர், பெங்களூரு புறநகரில் 503 பேர், பீதரில் 171 பேர், சாம்ராஜ்நகரில் 93 பேர், சிக்பள்ளாப்பூரில் 311 பேர், சிக்கமகளூருவில் 196 பேர், சித்ரதுர்காவில் 204 பேர், தட்சிண கன்னடாவில் 792 பேர், தாவணகெரேயில் 153 பேர், தார்வாரில் 648 பேர், கதக்கில் 134 பேர், ஹாசனில் 968 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

15 சதவீதம் உயர்வு

ஹாவேரியில் 17 பேர், கலபுரகியில் 384 பேர், குடகில் 150 பேர், கோலாரில் 541 பேர், கொப்பலில் 93 பேர், மண்டியாவில் 718 பேர், மைசூருவில் 729 பேர், ராய்ச்சூரில் 109 பேர், ராமநகரில் 122 பேர், சிவமொக்காவில் 305 பேர், துமகூருவில் 1,326 பேர், உடுப்பியில் 607 பேர், உத்தர கன்னடாவில் 237 பேர், விஜயாப்புராவில் 76 பேர், யாதகிரியில் 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story