சென்னிமலை அருகே பூப்பறிக்கும் திருவிழா; வனப்பகுதிக்கு சென்று பூப்பறித்த பெண்கள், சிறுவர்-சிறுமிகள்


சென்னிமலை அருகே பூப்பறிக்கும் திருவிழா; வனப்பகுதிக்கு சென்று பூப்பறித்த பெண்கள், சிறுவர்-சிறுமிகள்
x
தினத்தந்தி 15 Jan 2022 10:27 PM GMT (Updated: 15 Jan 2022 10:27 PM GMT)

சென்னிமலை அருகே நடந்த பூப்பறிக்கும் திருவிழாவையொட்டி வனப்பகுதிக்கு சென்று பெண்கள், சிறுவர்-சிறுமிகள் பூப்பறித்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ந்தனர்.

சென்னிமலை
சென்னிமலை அருகே நடந்த பூப்பறிக்கும் திருவிழாவையொட்டி வனப்பகுதிக்கு சென்று பெண்கள், சிறுவர்-சிறுமிகள் பூப்பறித்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த தின்பண்டங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ந்தனர். 
பூப்பறிக்கும் திருவிழா
சென்னிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்ெபாங்கலன்று  பூப்பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னிமலை பகுதியில் குறைந்த அளவிலான பெண்களே பூப்பறிக்க சென்று வந்தனர்.
இந்த ஆண்டும் தைப்பொங்கலுக்கு மறுநாளான நேற்று பூப்பறிக்கும் திருவிழா நடந்தது.  சென்னிமலை அருகே தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுப்புதூர், தோப்புப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் வனப்பகுதிக்கு சென்று பூப்பறித்தனர். இந்த ஆண்டு கொரோனா பரவலால் சென்னிமலை நகர பகுதியில் உள்ள பெண்கள் மிக குறைவான எண்ணிக்கையில் வனப்பகுதிக்கு பூப்பறிக்க சென்றனர். 
பரிமாறி மகிழ்ந்தனர்
இதற்காக நேற்று காலை 10 மணி அளவில் தங்களது வீடுகளில் இருந்து கரும்பு மற்றும் இனிப்பு, கார வகைகளை எடுத்து கொண்டு அங்குள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு அனைவரும் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்களை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். பின்னர் மாலை 3 மணி அளவில் அங்கிருந்து பாட்டு பாடியபடி தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
அதைத்தொடர்ந்து வீட்டு வாசலில் கோலமிட்டு அங்கு ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக சாணத்தால் பிடித்து வைத்திருந்த விநாயகர் மற்றும் கரும்பு, மஞ்சள் குலைகள் ஆகியவற்றை வைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதுகுறித்து பூப்பறிக்க சென்ற பெண்கள் கூறியதாவது:-
மாட்டு பொங்கல்
இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு வருகிறது. அதுதவிர இந்த ஆண்டு தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பாரம்பரியமாக நடந்து வரும் பூப்பறிக்கும் திருவிழாவும் நின்று போகக்கூடாது என்பதற்காக நாங்கள் குடும்பத்தோடு பூப்பறிக்க சென்றோம். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் தாங்கள் பிடித்து வைத்திருந்த விநாயகரை தங்களது வீடு அருகிலேயே உள்ள நீர்நிலைகளில் விட்டோம்’ என்றனர்.
மேலும் நேற்று மாட்டு் பொங்கல் என்பதால் சென்னிமலை அருகே கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி இரவு மாட்டு கொட்டகையில் பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தனர்.

Next Story