தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 16 Jan 2022 2:30 PM GMT (Updated: 16 Jan 2022 2:30 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை 

நெல்லை அருகே உள்ள சிவந்திப்பட்டியில் இருந்து ஆச்சிமடத்திற்கு செல்லும் சாலை, ரெட்டியார்பட்டிக்கு செல்லும் சாலை, பருத்திப்பாடு செல்லும் சாலை, காரசேரிக்கு செல்லும் சாலை கடந்த சில மாதங்களாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஆங்காங்கே ராட்சத பள்ளமும் உள்ளது. இதனால் ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட செல்ல முடியாமல் மக்கள் கடுமையாக அவதிப்படுகிறார்கள். இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் நெல்லையில் இருந்து சிவந்திப்பட்டிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு டவுன் பஸ்சும் குண்டும், குழியுமான சாலையால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைக்கவும், நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துப்பாண்டி, சிவந்திப்பட்டி.

ராட்சத குழாயால் இடையூறு

மானூர் வடக்கு ஒன்றியம் வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ராட்சத குடிநீர் குழாய் சாலையோரத்தில் கிடக்கிறது. இதன் அருகே கழுகுமலைக்கு செல்லும் இணைப்பு சாலையும் உள்ளது. இந்த சாலையானது பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகளுக்கு முக்கிய சாலையாக உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே இந்த ராட்சத குடிநீர் குழாயை அங்கிருந்து அகற்றி, வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
சரவண பாண்டியன், வன்னிக்கோனேந்தல்.

மதகு சீரமைக்கப்படுமா? 

திசையன்விளை வட்டம் கண்ணநல்லூர் கிராமம் நம்பியாற்று படுகையில் கீழ்குளம் மறுகால் மதகு சமீபத்தில் பெய்த மழையால் சேதம் அடைந்துள்ளது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஸ்டீபன், சீேயான்மலை. 

கொசு மருந்து அடிக்க வேண்டும்

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் அதில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே கிராமத்தில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரிய கிராமத்தில் இருந்து வேலாயுதபுரம், சின்னகோவிலான்குளம் வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். ஆகவே அந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.
கணேசன், கீழக்கலங்கல்.

சேதம் அடைந்த பயணிகள் நிழற்கூடம் 

ஊத்துமலை வடக்கு பஸ் நிறுத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பயணிகள் நிழற்கூடமானது மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து காணப்படுகிறது. மேலும் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் அமரும் இடமும் சேதம் அடைந்து உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும்.
பாபா, ஊத்துமலை.

சாலை சீரமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து மானங்காத்தான் கிராமம் வரை சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இங்கு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலை குறுகலாக இருப்பதால், இதை அகலப்படுத்த ெநடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜீவா, கயத்தாறு.

* உடன்குடியில் இருந்து குரும்பூர், ஏரல் ஆகிய ஊர்களுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் காயாமொழி, கானம்பூச்சிக்காடு சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த சாலை பூச்சிக்காடு முதல் குரும்பூர் வரை போக்குவரத்து உகந்ததாக இல்லை. மேலும் தேரிக்காடு பகுதியில் வாகனங்கள் சாலையை விட்டு கீழே இறங்கி செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சாகுல்அமீது, உடன்குடி.

Next Story