கடந்த 2 நாட்களில் துணை சூப்பிரண்டு உள்பட 33 போலீசாருக்கு தொற்று


கடந்த 2 நாட்களில் துணை சூப்பிரண்டு உள்பட 33 போலீசாருக்கு தொற்று
x
தினத்தந்தி 16 Jan 2022 5:36 PM GMT (Updated: 16 Jan 2022 5:36 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 33 போலீசாருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதால் காவல்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 33 போலீசாருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதால் காவல்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவது தெரிந்ததே. இதனை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்துவதோடு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த தொற்று பரவல் தற்போது 3 இலக்க எண்ணிக்கையை கடந்து சென்று கொண்டிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் காவல்துறையினர் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

33 பேருக்கு தொற்று

 கடந்த 2 நாட்களில் மாவட்டத்தில் தற்போது ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு அமைச்சு பணியாளர் பெண் அதிகாரி என மொத்தம் 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மாவட்ட காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு உள்ளிட்டவற்றில் பெரும்பாலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் காவல்துறையினர் அதிகளவில் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது காவல்துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு அனைவரும் கலக்கமடைந்துள்ளனர். 
ஊரடங்கு என்றாலும் முன்களப்பணியாளர்கள் என்ற முறையில் பணியில் உள்ளதால் காவல்துறையினரை அதிகளவில் தொற்று பாதித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் அனைத்து காவல்துறையினருக்கும் பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story